மாநில சுயாட்சி.. முதல்வர் ஸ்டாலின் பேச பேச.. அவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிய நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
பேசுவதற்கு வாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று செய்தி, விளம்பரத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. செய்தி மற்றும் விளம்பரம், தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிகை மீதான விவாதத்தில் பங்கேற்று புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் அமைச்சர் மு.பெ. சாமிநாதன்.
முன்னதாக இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாமல் கூட்டாட்சி கொண்ட நாடாகத்தான் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கினார்கள்.
மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று திமுக தொடர்ந்து முழங்கி வருகிறது. ராஜமன்னார் தலைமையில் உயர்மட்ட குழுவை மறைந்த முதலமைச்சர் கருணாநிதி அமைத்தார். இந்த குழுவின் இந்த குழுவின் முக்கிய பரிந்துரைகளை இந்த சட்டப்பேரவையில் தீர்மானமாக கருணாநிதி நிறைவேற்றினார். மாநிலங்கள் அதிகாரம் கொண்டவைகளாக இருந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும்" எனப் பேசினார்.
மேலும், நாட்டின் மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான உறவுகளை ஆராய்ந்து, இந்த உறவுகள் மேம்படுவதற்காக நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் நாகநாதன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், "கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டியது இன்றியமையாதது. நீட் தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாகவும், பயிற்சி மையங்களை ஊக்குவிக்கும் வண்ணமும் கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. மாநில பட்டியலில் இருந்த கல்வி, ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதால் மும்மொழி கொள்கை என்னும் போர்வையில் இந்தி மொழியை மறைமுகமாக திணிக்க முற்படுகிறது" எனத் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிய நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். பேசுவதற்கு வாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக உறுதி செய்த நிலையில், இன்று மாநில சுயாட்சி பற்றி முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசும்போது அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications