தப்பு தப்பு.. உப்பால் வருங்காலத்தில் உலகிற்கே பாதிப்பு.. விழுந்தடித்து வந்த "ஹூ".. 5 கிராம் போதுமாம்
சென்னை: உலகம் முழுவதும் மக்கள் உணவில் அளவுக்கு அதிகமாக உப்பை எடுத்துக்கொள்ளகிறார்கள் என்றும், இது தவிர்க்கப்படவில்லையெனில் எதிர்வரும் நாட்களில் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உப்பு! இந்த வார்த்தையை சொன்னாலே நாக்கு லைட்டாக கரிக்கும். அந்த அளவுக்கு பவர்புஃல்லானது உப்பு. அது மட்டுமல்லாது உப்பு மீதான காதல் இந்தியர்களுக்கு சற்று அதிகம்தான். மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையில் மலர்ந்த உப்புக்கும்-இந்தியர்களுக்குமான உறவு, சோத்துல உப்பு போட்டு சாப்பிட்டாதா ரோஷம் வரும் என்பது வரை வளர்ந்து நின்றுக்கொண்டிருக்கிறது. தற்போது இந்த-உப்பு- காதலை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அடிப்படையில் உப்பில் பல வேறுபாடுகள் இருந்தாலும், நாம் உணவுக்கு இரண்டு மூன்று வகையான உப்புக்களையே பயன்படுத்துகிறோம். வீட்டில் பரவலாக பயன்படுத்தும் உப்பு NaCl எனப்படும் சோடியம் குளோரைடாகும். இதில் சுவாரசியம் என்னவெனில் சோடியத்தை (Na) தனியாக நம்மால் பயன்படுத்த முடியாது அது வெடிக்கும் தன்மை கொண்டது. இதேபோல குளோரின் (Cl) வாயுவும் அதிக விஷத்தன்மை கொண்டதாகும். ஆனால் இது இரண்டையும் ஒன்றாக கலந்தால் அதை நம்மால் சாப்பிட முடியும். இது தவிர சோடா உப்பு, இயற்கை உப்பு படிமங்கள் ஆகியவையும் இருக்கின்றன.

எச்சரிக்கை
சரி தற்போது விஷயத்திற்கு வருவோம். உப்பில் என்ன பிரச்னை? ஏன் உப்பு குறித்து WHO அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது என்றால் அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. சமீப நாட்களாக இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல சிறுநீரக தொற்று, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனை கவனித்த உலக சுகாதார அமைப்பின் மருத்துவர்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உப்பு எந்த அளவு பயன்படுத்தப்படுகிறது என்கிற ஆய்வை மேற்கொள்ள தொடங்கினர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இந்தியா
அதாவது இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் உப்பு மீது மக்கள் தீராத காதலை கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் இந்த உப்பை இரண்டு மடங்கு எடுத்துக்கொள்கிறார்கள் என்பதுதான் இந்த ஆய்வில் கிடைத்த தகவல். இதன் காரணமாக இதய நோய்கள், சிறுநீரக பாதிப்பு மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்கள் அதிகமாக ஏற்படுகின்றன. ஒருவேளை இது இப்படியே தொடர்ந்தால் என்ன ஆகும் என்று யோசித்த WHOக்கு தலை கிறுகிறு என்று சுற்றியிருக்கிறது. ஆகவே கையோடு இதை ஒரு அறிக்கையாக தயார் செய்து மக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் உலக அளவில் பல்வேறு நாடுகள் எவ்வளவு உப்பை எடுத்துக்கொள்கின்றன, இதை எவ்வளவாக குறைக்க வேண்டும் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது.

சீனா
அதன்படி உலக அளவில் சீன மக்கள்தான் அதிக அளவு உப்பை எடுத்துக்கொள்கிறார்கள். அதாவது மனிதன் ஒரு நாளைக்கு வெறும் 5 கிராம் உப்பை மட்டும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். 5 கிராம் என்பது வெறும் ஒரு டீஸ்பூன் அளவு உப்புதான். ஆனால் சீனர்கள் 10.9 கிராம் உப்பை எடுத்துக்கொள்கிறார்கள். இந்தியா இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது. இந்தியர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 10 கிராம் உப்பை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். அதாவது வீட்டில் இவ்வளவு உப்பை யாரும் பயன்படுத்துவதில்லை, மாறாக ஓட்டல்களில் செய்யப்படும் உணவுகளில் சோடா உப்பு அதிகம் கலக்கப்படுகிறது.

பாதிப்பு என்ன?
எனவே இதனை உட்கொள்ளும்போது நமது உடலில் உப்பின் அளவு அதிகரிக்கிறது. இதை தவிர்க்க வீட்டு உணவுகளை மட்டும் சாப்பிடுமாறு மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். உடலில் உப்பின் அளவை கண்ட்ரோல் செய்யும் பொறுப்பு சிறுநீரகத்தினுடையதுதான். இப்படி உப்பு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது சிறுநீரகங்கள் செயலிழக்கும் வாய்ப்பு அதிகம். மறுபுறம் ஹார்ட் அட்டாக், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள், உடலில் கால்சியம் அளவு குறைந்து எலும்பு தேய்மானம் அடைதல் ஆகியவை ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications