யூரிக் ஆசிட் ஓவராயிருச்சா? இந்த 5 இலைகள் போதுமே.. யூரிக் அமிலம் அளவை கண்ட்ரோல் செய்யும் கறிவேப்பிலை
சென்னை: நம்முடைய உடலில் இருக்கும் பல விஷயங்கள் சீரான அளவில் இருக்க வேண்டும்... அளவுக்கு அதிகமாக இருப்பதால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அதில் ஒன்றுதான் யூரிக் அமலம்.. இந்த யூரிக் அமிலம் எவ்வளவு அளவுடன் இருக்க வேண்டும்? அளவு அதிகரித்துவிடும்போது, இதனை குறைக்க செய்யும் இயற்கை மூலிகை இலைகள் என்னென்ன?
நாம் சாப்பிடக்கூடிய உணவிலுள்ள "ப்யூரின்" என்ற சேர்மமானது, ஜீரணமாகும்போது யூரிக் அமிலமாக உற்பத்தியாகிறது. இது நம் உடலிலிருந்து வெளியேற வேண்டிய கழிவாகும். இந்த கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேறுகிறது.

எப்போதுமே, கல்லீரலில் சுரக்கும் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேற்றம் செய்யப்படும் யூரிக் அமிலத்தின் அளவு சீரானதாக இருக்க வேண்டும்... யூரிக் அமிலம் ஒரு டெசிலிட்டருக்கு 3.5 முதல் 7.2 மில்லிகிராம் வரம்பில் இருக்க வேண்டும். உடலில் உற்பத்தி செய்யும் அளவை விட, வெளியேறும் யூரிக் அமிலத்தின் அளவு குறைவானால், மூட்டுகளுக்கு இடையில் தேங்கி நின்று, வலியையும், வீக்கத்தையும் உண்டுபண்ணிவிடும்..
சிறுநீரகத்தில் கற்கள்: யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருந்தால் கீழ்வாத பிரச்சனையை உண்டாக்கிவிடும்.. அத்துடன், சிறுநீரகத்தில் கல், சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்... எலும்புகள் பலவீனமாகி முறிவு ஏற்படுதல் போன்ற தொந்தரவுகளும் ஏற்படலாம். இந்த பிரச்சனைகளை போக்க எண்ணற்ற மருத்துவ சிகிச்சைகள் உள்ளன.
அதேசமயம், இயற்கை உணவின் மூலமாக, குறிப்பாக சில மூலிகை இலைகளின் மூலமாகவே இந்த யூரிக் அமிலத்தின் அளவை குறைக்கலாம். உதாரணத்துக்கு கொத்தமல்லி இலைகளை எடுத்து கொண்டால், ரத்தத்தில் உள்ள கிரியேட்டினின் மற்றும் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும் தன்மையை பெற்றிருக்கின்றன.
கொத்தமல்லி: வைட்டமின் C, K, இரும்புச்சத்து, நார்ச்சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம் அடங்கியிருக்கும் கொத்தமல்லி இலைகள், யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவுகின்றன. எனவே, கொத்தமல்லியை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வரலாம்.
பச்சையான பிரியாணி இலைகள், யூரிக் அமிலத்தை குறைக்க செய்கின்றன. வைட்டமின் C, A, ஃபோலிக் அமிலம் இதில் உள்ளதால் யூரிக் அமிலத்தை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. எனவே, 15 பிரியாணி இலைகளை, 3 கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
கறிவேப்பிலை: அதேபோல, கறிவேப்பிலையிலுள்ள ஏராளமான ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த செய்கிறது.. கல்லீரலின் ஆரோக்கியத்தையும் கறிவேப்பிலை காக்கின்றன.. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.
துளசி இலைகளிலுள்ள சில மூலக்கூறுகள் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன. இது இயற்கையான டையூரிடிக் பண்புகளை கொண்டிருப்பதால், சிறுநீர் உற்பத்தியைத் தூண்டி உடலிலிருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்றுகிறது.. இந்த இலைகளையும் ஒரு கைப்பிடி எடுத்து அலசி, வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வரலாம்.
சீந்தல்: குடுச்சி என்றும் அழைக்கப்படும் சீந்தில், சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது.. சீந்திலின் இலைகள் மட்டுமல்லாமல், வேர்கள், தண்டுகளும்கூட மருந்தாகிறது.. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதோடு, உடலில் அதிகரித்து காணப்படும் யூரிக் ஆசிட்டின் அளவையும் குறைக்க உதவுகிறது. தொடர்ந்து சீந்திலை எடுத்து கொள்வது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications