ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன செய்ய வேண்டும்? "அந்த" இடங்களில் வலி இருந்தால் மாரடைப்புதானா?
சென்னை: மாரடைப்பு குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் சிவகங்கை அரசு மருத்துவமனையின் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார். ஹார்ட் அட்டாக்கிற்கான சிகிச்சை முறைகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஹார்ட் அட்டாக் வந்தால் செய்ய வேண்டியது என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அளிக்கும் மூன்று முக்கிய தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை இதய ரத்த நாள அடைப்பு (MYOCARDIAL INFARCTION) என்கிறோம்.
ரத்த நாள அடைப்பு
இதய ரத்த நாள அடைப்பு என்பது அவசர நிலையாகும். ரத்த நாள அடைப்பு ஏற்பட்ட நொடியில் இருந்து அடைப்புக்குள்ளான அந்த குறிப்பிட்ட தமனியால் ஊட்டம் பெறும் இதயத்தின் தசைப்பகுதி செல்கள் வேகமாக இறக்க ஆரம்பிக்கின்றன.
ரத்தம் உறைதல்
நாம் இதை அவசர நிலையாகக் கருதி உடனடியாக ரத்த நாள அடைப்பை சரி செய்யாவிடில் இதயத்தின் பெரும்பகுதி தசைகள் இறந்து அதனால் இதயத்தின் ரத்தத்தை உந்தும் ஆற்றல் குறைந்து இதயம் செயலிழந்து மரணம் சம்பவிக்கும். அல்லது காலம் முழுவதும் இறந்த இதயத் தசைகளை வைத்துக் கொண்டு செயல் குன்றிய இதயத்தை வைத்துக் கொண்டு வாழ வேண்டியிருக்கும்.
இடது பக்க நெஞ்சு
இடது பக்க நெஞ்சுப் பகுதியில் உள்ளிருந்து குடைவதைப் போல அதீத வலி ஏற்பட்டாலோ இடப்பக்க நெஞ்சு வலி இடப்பக்க தோள் பகுதி வரை, தாடை வரை, இடப்பக்க நெஞ்சின் பின் பகுதி, கழுத்துப் பகுதி வரை வலி பரவலாம். சில நேரங்களில் நெஞ்சுப் பகுதியில் வாயுக்குத்து போல வலி ஏற்படக் கூடும். வாந்தி குமட்டல் வயிற்று வலி என்று உணவினால் ஏற்படும் நச்சின் அறிகுறிகள் போலவும் தோன்றலாம்.
மூச்சுவிட சிரமம்
இவையன்றி மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத் திணறல், தலைசுற்றல் / பதட்டம் / படபடப்பு, முழுவதும் மயக்கமடைதல் போன்ற அறிகுறிகளுடன் இதய ரத்த நாள அடைப்பு வெளிப்படக் கூடும். மேற்கூறிய அறிகுறிகள் தோன்றியவுடன் அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்று ஈசிஜி (ELECTRO CARDIOGRAM) எனும் இதயத்தின் மின்இயங்குவியல் வரை படத்தைப் பார்த்து இதய ரத்த நாள அடைப்பை கண்டறிய முடியும்.
ஹார்ட் அட்டாக் வந்தால் ஈசிஜி
எனினும் ஹார்ட் அட்டாக் வந்த சிலருக்கு ஈசிஜி நார்மலாக இருக்கும் . அறிகுறிகள் அனைத்தும் இதய ரத்த நாள அடைப்பை விளக்கும் விதமாக இருக்கும். இவர்களுக்கு ட்ரோபோனின் (TROPONIN) எனும் நொதியை அளக்கும் பரிசோதனை செய்யப்படும். இதயத்தின் தசைகள் காயத்துக்கு உள்ளாவதை ட்ரோபோனின் அதிகரிப்பை வைத்து அறிய முடியும்.
லோடிங் டோஸ்
இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டிருப்பதை நவீன இதய மீட்பு சிகிச்சை வசதிகள் இல்லாத கிளினிக்குகள் / ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் கண்டறியப்படும் வாய்ப்பே அதிகம். அதுவரை ரத்த நாள அடைப்பை கரைக்கும் வண்ணமாய் LOADING DOSE எனப்படும் ரத்த உறைதலை மட்டுப்படுத்தச் செய்யும்
ஆஸ்பிரின்(ASPIRIN) மாத்திரை 325 மில்லிகிராம் அளவு
+
க்ளோபிடோக்ரெல் (CLOPIDOGREL) 300 மில்லிகிராம் அளவு
+
அடோர்வாஸ்டாட்டின்(ATORVASTATIN) 80 மில்லிகிராம்
என்ற மூன்று மாத்திரைகளையும்
உட்கொள்ள வேண்டும்.
ரத்தத்தை உறைய விடாது
இந்த மாத்திரைகள் ரத்தக் கட்டியை மேலும் உறைந்து கட்டிப்படாமல் பார்த்துக் கொள்ளும். இதன் விளைவாக இதயத்தின் தசைகள் இறக்காமல் காத்திட முடியும். இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்ட நொடியில் இருந்து முதல் மூன்று மணிநேரங்களுக்குள் நவீன இதய மீட்பு சிகிச்சை இருக்கும் மருத்துவமனையை அடைந்தால் ரத்தக் கட்டியை கரைக்கும் மருந்தை (THROMBOLYSIS) சிரை வழியாக செலுத்தி அடைப்பைக் கரைக்க முடியும்.
ஐசியூ வசதி
இது முதல் மூன்று மணி நேரங்களுக்குள் நவீன சிகிச்சை கிடைக்கும் ஐசியூ வசதி உள்ள மருத்துவமனைகளுக்கு சென்றால் மட்டுமே கிடைக்கும். ஸ்ட்ரெப்டோகைனேஸ், ஆல்டெப்லேஸ்,
டெனெக்டெப்லேஸ் போன்ற மருந்துகள் ரத்த கட்டியை கரைக்கும் தன்மையுடன் செயல்படும்.
அவசர சிகிச்சை
அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் போன்றவற்றை மூன்று மணி நேரங்களுக்குள் அடைவது மூலம் ரத்த நாள அடைப்பை நீக்கும் THROMBOLYSIS சிகிச்சை பெற முடியும். நவீன கேத் லேப் எனப்படும் இதய அவசர சிகிச்சை கிடைக்கும்.
மருத்துவமனை
மருத்துவமனைகளுக்கு செல்லும் போது தோல் வழி கேதிட்டர் எனும் நெழிவுத்தன்மை கொண்ட குழாயை சிரை வழியாக செலுத்தப்படும். இதயத்தின் அடைபட்ட ரத்த நாளத்திற்கு சென்றதும் இந்த கேதிட்டரின் முனையில் இருக்கும் பலூன் ஊதப்படும். இதனால் ரத்த நாள அடைப்பு எடுக்கப்படும். அங்கே ஸ்டெண்ட் எனும் எஃகினால் செய்யப்பட்ட கருவி பொருத்தப்படும்.
ஸ்டன்ட்
இந்த ஸ்டெண்ட்டில் இருந்து மேற்கொண்டு ரத்த கட்டியோ கொழுப்பு கட்டியோ உருவாகாத படி சிறிய அளவில் மருந்து உமிழப்பட்டுக் கொண்டே இருக்கும். இதை PRIMARY PERCUTANEOUS INTERVENTION என்று அழைக்கிறோம். ஹார்ட் அட்டாக் வந்தால் முதல் மூன்று மணிநேரத்திற்குள் இதய அவசர சிகிச்சை செய்யத் தகுந்த மருத்துவமனையை அடைய வேண்டும்.
மரணத்தை தவிர்க்கலாம்
லோடிங் டோஸ் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். ஹார்ட் அட்டாக் மரணங்களில் பெரும்பான்மை மரணங்கள் சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காததால் நிகழ்வதாகவே இருக்கின்றன . இதை கவனத்தில் கொண்டு உடனே செயல்படுவோம், உயிர்களைக் காப்போம். இவ்வாறு பரூக் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications