சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் குழந்தைகள் இறந்தது ஏன்? அன்று இரவு அறையில் நடந்தது என்ன?
சென்னை: சென்னை குன்றத்தூரில் எலிகளை கட்டுப்படுத்த மருந்து வைத்தபோது குழந்தைகள் இருவர் இறக்கும் நிலை ஏற்பட்டது ஏன் என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை குன்றத்தூரில்
எலிகளைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சி ஒரு குடும்பத்தின் இரு உயிர்களைப் பறித்துள்ளது துயரம்
குன்றத்தூர் பகுதியில் உள்ள வீடொன்றில் எலிகளின் தொல்லை அதிகமாக இருந்தமையால் எலிகளைக் கொல்வதற்காக தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியை குடும்பத்தின் தலைவர் நாடியுள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று மாலை வீட்டில் எலி குடி கொண்டிருந்த பல பகுதிகளிலும் எலி மருந்து வைக்கப்படவும் அந்த மருந்தின் விளைவால் மரணம் நிகழ்ந்திருப்பது தெரிகிறது. எலித்தொல்லை என்பது கிட்டத்தட்ட அனைத்து வீடுகளில் பொதுவான ஒன்றாக இருப்பதால் எலிகளைக் கொல்வதற்கு எலிப் பொறி வைப்பது ,எலி கேக் வைப்பது , எலி பேஸ்ட் வைப்பது ( தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டது) என்று பல முயற்சிகளையும் நாம் எடுப்பதுண்டு.
இந்நிலையில் சம்பவம் நிகழ்ந்த வீட்டில், எலிக்கொல்லி மருந்து வைக்கப்பட்டவுடன் அன்றிரவு குளிர்சாதன வசதியுடன் கூடிய அறையில் குடும்பத்தின் தாய் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருக்க
காலை எழுந்து பார்க்கும் போது இரு குழந்தைகளும் மூர்ச்சை நிலையில் சுயநினைவின்றி இருந்துள்ளனர்.
தாய் தந்தை இருவருக்குமே உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
என்ன நடந்திருக்கலாம்..? பொதுவாக வயல் வெளிகளிலும் சரி , வீடுகளிலும் சரி, தானியக் கிடங்குகளிலும் சரி , எலிகள் தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. எலிக்கொல்லிகளில் இரண்டு வகைகள் உண்டு.
முதல் வகை - ரத்த உறைதலைத் தடுத்து ரத்தப் போக்கை ஏற்படுத்திக் கொல்லும் தன்மை கொண்ட எலிக் கொல்லிகள். இவை ஒப்பீட்டளவில் சற்று நச்சுத்தன்மை குறைந்தவை . எடுத்துக்காட்டுகள்- வார்ஃபாரின்,
நார்ப்ரோமைடு போன்றவை.
அடுத்த வகை - மூளை, இதயம், நரம்பு மண்டலம் போன்றவற்றை நேரடியாகத் தாக்கி துரிதமாகக் கொல்பவை. இந்த வகையில் வருபவை
அலுமினியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகத்தின் பாஸ்பைடுகள், ஸ்ட்ரிச்னின் , பாஸ்பரஸ் உலோகம் அதிலும் வெள்ளை பாஸ்பரஸ் - அதீத நச்சுத்தன்மை கொண்டது . அர்செனிக் ஆகியவை அதீத நச்சுத்தன்மை கொண்டவை.
இவற்றுள் பாஸ்பைடுகள் , ஸ்ட்ரிச்னின் , ப்ரோமெதாலின் போன்றவை எளிதாக ஆவியாகக் கூடியவை. எனவே வீட்டின் ஒரு அறையில் வைத்தாலும் மற்ற அறைகளுக்கு அந்த ஆவி பரவும் வாய்ப்பு உள்ளது.
பாஸ்பைடுகள் தான் ஸ்ப்ரே மூலம் அடிக்கப்படுகின்றன.
மேலும் மாத்திரைகளாகவோ பொடிகளாகவோ வைத்தாலும் காற்றில் கலக்கக் கூடியவை.
மூலை முடுக்கெங்கும் பரவும் தன்மை கொண்டவை.
எலி இருக்கும் பொந்துகளுக்குள்ளும் சென்று கொல்லும் தன்மை கொண்டவை.
இந்த பாஸ்பைடில் இருந்து வெளிவரும் மருந்து
காற்றில் ஈரப்பதத்துடன் சேர்ந்து அபாயகரமான பாஸ்ஃபின் வாயுவாக மாறி விடுகிறது. இந்த பாஸ்பின் வாயு கண்களுக்கு கூட லேசான எரிச்சலையும் தோலில் எந்த வித எரிச்சலும் உள்ளாக்காத வாயு.
இவ்வாறு வெளி வரும் பாஸ்பின் வாயுவுக்கு எந்த வாசமும் இல்லை. மிஞ்சிப்போனால் பூண்டு வாசம் லேசாக அடிக்கலாம். அதுவும் தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
மூச்சு விடுவதில் சிரமம் , தசைப் பிடிப்பு , தலை சுற்றல்
மூர்ச்சை நிலை போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
எலிகளைக் கொல்வதற்காக வைக்கப்பட்ட எலிக்கொல்லி மருந்தில் இருந்து வெளிவந்த வாயு - ஏசி அறைக்குள் கதவு இடுக்குகள் வழியாக உள்சென்று மேலும் வெளியேற போதிய வழிகள் இல்லாமையாலும் காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் இணைந்து பாஸ்ஃபினாக உருமாறி குழந்தைகளுக்கும் அவர்தம் தாய்க்கும் தந்தைக்கும் ஊறு விளைவித்துள்ளது.
இனி எலிகளைக் கொல்வதென முடிவெடுத்தால்
இத்தகைய எலிக்கொல்லி மருந்துகளை உபயோகிக்கும் போது அடுத்த இருபத்தி நான்கு மணிநேரம் அந்த வீட்டில் தங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகும் கூட குழந்தைகளை அடுத்த ஓரிரு நாட்கள் அங்கு கூட்டி வருதல் கூடாது.
எலிக்கொல்லி உபயோகப்படுத்திய பிறகு சில நாட்கள்
முடிந்த அளவு காற்றோட்டமுள்ள அறைகளில் ஜன்னல்களைத் திறந்து வைத்து உறங்க வேண்டும்.
எலி கேக், எலி பேஸ்ட் போன்றவற்றை குழந்தைகளுக்கும் வீட்டில் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளுக்கும் எளிதில் கிடைக்காத வகையில் வைக்க வேண்டும்.
இனியொரு குடும்பத்தில் இது போன்ற சோகம் நிகழ்ந்து விடக்கூடாது, நம் அனைவருக்குமே எச்சரிக்கை அவசியம். இரு குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர்கள் இருவருக்கும் ஆழ்ந்த இரங்கல். அவர்கள் இருவரும் உடல் நலம் தேறி வர பிரார்த்தனைகள் என டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications