Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிட்டத்தட்ட 100% உயிர் போய்விடும்.. கேரளாவில் பரவும் மூளையை தின்னும் கொடூர அமீபா! தடுப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது அண்டை மாநிலமான கேரளாவில் திடீரென மூளையை தின்னும் அமீபா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு ஓரிரு பாதிப்புகள் மட்டுமே பதிவாகி வந்த நிலையில், இப்போது திடீரென 69 பேருக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு ஆபத்தானது.. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுமா.. இதைத் தடுப்பது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்போது மிகவும் ஆபத்தான மூளையை தின்னும் அமீபா பரவி வருகிறது. கடந்தாண்டு வரை குறைவான கேஸ்களே பதிவாகி வந்த நிலையில், இந்தாண்டு இதுவரை 69 பேர் இந்த அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாகக் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் கோழிக்கோட்டில் ஒரு மூன்று மாதக் குழந்தை மற்றும் 52 வயது பெண் மரணமடைந்தனர்.

kerala tamil nadu health

அதிகரிக்கும் மூளைக்காய்ச்சல்

இப்படித் திடீரென இந்த அமீபிக் மூளைக்காய்ச்சல் அதிகரித்து வரும் சூழலில் கேரள அரசு நீர் நிலைகளை குளோரின் மூலம் சுத்தப்படும் பணிகளை உடனடியாகத் தொடங்கியுள்ளது. கிணறுகள், தண்ணீர்த் தொட்டிகள் மற்றும் பொதுக் குளியல் பகுதிகளை குளோரின் போட்டு சுத்தம் செய்து வருகிறார்கள். மேலும், மழைக் காலத்தில் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாகக் கேரளச் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "கடந்தாண்டு ஒரே நீர்த்தேக்கத்தில் இருந்து பரவிய நோயால் பலர் உயிரிழந்திருந்தனர். இதுபோன்ற கிளஸ்டர் உயிரிழப்புகள் இந்தாண்டு இல்லை. இவை அனைத்தும் தனித்தனி நிகழ்வுகள்.. இதனால் நோய் பாதிப்பு ஏற்பட எந்த நீர்நிலை காரணம் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் நிலவுகிறது" என்றார்.

கேரளாவில் உயிர் பிழைத்தோர் அதிகம்

இந்த நோய்ப் பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழக்கவே வாய்ப்புகள் அதிகம்.. உலகளவில் இந்த நோய்ப் பாதிப்பு ஏற்பட்டோரில் 97% பேர் உயிரிழந்துள்ளனர். வெறும் 3% மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். அதேநேரம் கேரளாவில் அம்மாநிலச் சுகாதாரத் துறை மில்டெஃபோசின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை தருகிறது. இதன் மூலம் கேரளாவில் உயிர் பிழைத்தோர் விகிதம் 24% ஆக உயர்ந்துள்ளது. இது உலக சராசரியான 3%ஐ விட மிக அதிகம். அதேநேரம் உயிரைக் காப்பாற்ற முன்கூட்டியே சிகிச்சையைத் தொடங்குவது முக்கியம் என்கிறார்கள்.

எப்படிப் பரவுகிறது

நிக்லேரியா ஃபோவ்லேரி (Naegleria fowleri) என்ற அமீபா காரணமாகவே இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இது குளம், ஏரிகள், கிணறுகள், ஆறுகள் மற்றும் சரியாக குளோரினேஷன் செய்யப்படாத நீச்சல் குளங்கள் போன்ற வெப்பமான, நன்னீர் இருக்கும் பகுதிகளில் தென்படும். குறிப்பாகக் கோடை அல்லது மழைக்காலத்தில் இது பரவலாகக் காணப்படும். இதுபோன்ற அசுத்தமான நீர்நிலைகளில் நீச்சல் அடிக்கும்போது அல்லது முகம் கழுவும் போது இந்த அமீபா மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்துவிடும். அதுவே பிரச்சினையைத் தொடங்கி வைக்கிறது.

கேரளாவில் இந்த முறை சற்று அதிகமானோரைக் காப்பாற்ற முடிந்தாலும் இன்னுமே கூட உயிரிழப்புகள் அதிகமாகவே இருக்கிறது. மேலும், கடந்த காலங்களில் இந்த அமீபா பாதிப்பு ரொம்பவே அரிதாகவே இருந்தது. ஆனால், 2024 முதல் கேரளாவில் இந்த நோய்ப் பாதிப்பு அதிகரித்துள்ளது மர்மமாகவே இருக்கிறது. அதேநேரம் ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து நேரடியாக இது மற்றொருவருக்குப் பரவாது என்பது ஒரே ஆறுதல் தரும் விஷயமாகும்

அறிகுறிகள் என்ன

இந்த அமீபா உடலில் நுழைந்தவுடன் சராசரியாக 5 நாட்களில் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். அதிகபட்சமாகச் சிலருக்கு 12 நாட்களுக்குப் பிறகும் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். அதீதக் காய்ச்சல், கடுமையான தலைவலி, குமட்டல், வாந்தி, கழுத்து இறுக்கம் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.

நோய் தீவிரமடையும் போது மனக்குழப்பம் ஏற்படும். மேலும் பிரமை, வலிப்பு, சமநிலை இழப்பு மற்றும் கோமா ஆகியவை கூட ஏற்படுமாம்.. அதன் பிறகு வெறும் சில நாட்களிலேயே மரணம் தாக்கும். கோழிக்கோட்டில் ஒரு ஒன்பது வயது சிறுமி, காய்ச்சல் ஏற்பட்டு 24 மணி நேரத்திற்குள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தடுப்பது எப்படி

இந்தப் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க நாம் சில எளிமையான விஷயங்களைக் கடைப்பிடித்தால் போதும். சுத்திகரிக்கப்படாத கிணறுகள், தேங்கி நிற்கும் குளங்கள், ஆறுகள் அல்லது குளோரின் மூலம் சுத்தப்படுத்தப்படாத குளங்களில் குளிப்பதை மற்றும் நீந்துவதைத் தவிர்க்கவும். இதுபோன்ற தண்ணீரில் இறங்குவதையே தவிர்ப்பதுதான் உடலுக்கு நல்லது. மூக்கு மூலமாகவே இந்த அமீபா உடலில் நுழையும் என்பதால் பொது நீச்சல் குளத்தில் குளிக்கும்போது முடிந்தவரை தலையை நீருக்கு மேலேயே வைத்திருப்பது நல்லது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+