பசி வயிற்றை கிள்ளும்போது.. திடீரென சத்தம் வருதே.. அது ஏன் தெரியுமா! மருத்துவர்கள் அளிக்கும் விளக்கம்
டெல்லி: நம்மில் பலரும் பசி எடுக்கும்போது வயிற்றில் ஏதோ சத்தம் கேட்பது போல இருக்கும். நம்மில் பலரும் ஏதோ நமக்கு மட்டுமே இதுபோல சத்தம் கேட்கிறது என நினைத்திருப்போம். ஆனால், அப்படி இல்லை. கிட்டதட்ட எல்லாருக்கும் இதுபோல பசி எடுக்கும் போது சத்தம் கேட்குமாம். ஏன் இதுபோல சத்தம் கேட்கிறது என்பதற்கும் ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
நமது உடல் பல்வேறு ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொண்டது. இதன் காரணமாகவே சயின்ஸ் இந்தளவுக்கு வளர்ந்துவிட்ட போதிலும் மனித உடல் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதில் நாம் புது புது விஷயங்களையும் கண்டறிந்து வருகிறோம். அப்படி தான் நீண்ட நாட்களாக நம்மிடையே இருந்த கேள்விக்கு ஆய்வாளர்கள் பதிலைக் கொடுத்துள்ளனர்.

வயிற்றில் ஏற்படும் சத்தம்
அதாவது பொதுவாக நாம் எதாவது ஒரு ரூமில் உட்கார்ந்து கொண்டிருந்தால் வயிற்றில் எதாவது ஒரு மாதிரி சத்தம் கேட்கும். என்னப்பா திடீர்னு வயிற்றில் இருந்து சத்தம் எல்லாம் வருது என நீங்கள் நினைக்கலாம்.. முதலில் இந்த சத்தம் கேட்டு சிலர் பயந்தும் கூட இருக்கலாம். ஆனால், இதைக் கண்டு நீங்கள் பயப்படவும் தேவையில்லை. இது உங்களுக்கு மட்டும் நடப்பதும் இல்லை.
என்ன காரணம்
வயிற்றில் இருந்து வரும் அந்த சத்தம் முற்றிலும் இயற்கையானது.. இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த டாக்டர் நரந்தர் சிங்லா பிரபல ஆங்கில ஊடகத்திடம் கூறுகையில், "இது உங்கள் உடல் உங்களுக்கு அளிக்கும் ரிமைண்டர் போன்றது. உங்கள் உடலுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதை இது காட்டுகிறது.
வயிற்றுக்குள் நடப்பது என்ன
உங்கள் செரிமான அமைப்பு காலியாக இருப்பதை உணர்த்தும் விதமாக அந்த சத்தம் கேட்கிறது. அதாவது வயிற்றில் உணவு இல்லாதபோது, உங்கள் தசைகள் சுருங்கி மீதமுள்ள சிறு உணவு துகள்கள், வாயு அல்லது காற்றை வெளியேற்றும். அதுவே வயிற்றில் அந்த சத்தத்தை எழுப்புகிறது" என்கிறார். இந்த செயல்முறையை மருத்துவர்கள் பெரிஸ்டால்சிஸ் என்று குறிப்பிடுகிறார்கள். உங்கள் செரிமானப் பாதையில் உள்ள மென்மையான தசைகளின் அலை சிறு சுருக்கங்களின் தொடரை ஏற்படுத்துகிறது. இந்த சுருக்கங்கள் பொதுவாக ஏற்படும். ஆனால், வயிறு காலியாக இருக்கும்போது அவை அதிகமாக ஏற்படும்.
ஏனென்றால் உணவு இல்லாததால் அதற்குப் பதிலாகக் காற்றையும் செரிமான திரவங்களையும் உங்கள் வயிறு நகர்த்தும். இதன் காரணமாகவே அந்த சத்தம் கேட்கிறது. அதேநேரம் செரிமான அமைப்பில் ஏற்படும் இந்த சுருக்கங்கள் மட்டும் இதற்குக் காரணமில்லை. ஹார்மோன்களும் கூட இதில் ஒரு பங்கை வகிக்கின்றன.
ஹார்மோன்
நரந்தர் சிங்லா இது தொடர்பாகக் கூறுகையில், "உணவு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டால் பசி ஹார்மோன் கிரெலின் அதிகரிக்கிறது. இதுவும் செரிமான அமைப்பில் வலுவான சுருக்கங்கள் ஏற்படக் காரணமாக இருக்கிறது. இது உங்கள் வயிறு உருவாக்கும் ஒலிகளை அதிகரிக்கிறது. குறிப்பாக நீங்கள் சாப்பிட்டுப் பல மணி நேரம் ஆகிவிட்டது என்றால் அதுபோன்ற சத்தம் கேட்கவே செய்யும்" என்கிறார்.
என்ன செய்ய வேண்டும்?
இதுபோல சத்தம் வந்தால் அதைச் சரி செய்ய என்ன செய்வது என்ற கேள்வி வரும். இதற்கான பதில் ரொம்பவே ஈஸி.. சாப்பிட வேண்டும். உங்கள் வயிற்றில் உணவு நுழைந்தவுடன், அந்த சத்தம் குறைந்துவிடும். மேலும், அது வயிற்றில் உள்ள தசை இயக்கங்களையும் அமைதிப்படுத்துகிறது. மருத்துவர் சிங்கலா மேலும் கூறுகையில், "உணவு வயிற்றில் சென்ற உடனேயே சுருக்கங்கள் மெதுவாகும் கிரெலின் அளவு குறையும். இது செரிமான அமைப்பை அமைதிப்படுத்துகிறது. இதன் காரணமாகவே சாப்பிட்ட உடன் வயிற்றில் ஏற்படும் சத்தம் நின்றுவிடும்" என்றார்.
எனவே அடுத்த முறை திடீரென உங்கள் வயிற்றில் இருந்து சத்தம் கேட்டால் குழம்பிப் போக வேண்டாம். அது அதன் வேலையைச் செய்கிறது. நீங்கள் உங்கள் வேலையை (சாப்பிட்டால்) மட்டும் செய்தால் போதும்!












Click it and Unblock the Notifications