₹15,000லிருந்து ₹25,000 ஆக உயரும் ஊதிய உச்சவரம்பு.. பல ஆண்டு ஏக்கம்.. ஒருவழியாக முடிவிற்கு வருகிறது
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), ஊழியர்களுக்கான ஊதிய உச்சவரம்பை மாதத்திற்கு ₹15,000 இல் இருந்து ₹25,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் மேலும் 1 கோடிக்கும் அதிகமானோர் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் இந்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊதிய உச்சவரம்பு அதிகரிப்பால், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டம் (EPS) ஆகியவற்றில் கட்டாயமாக இணைக்கப்படுவார்கள். தற்போது, மாதத்திற்கு ₹15,000 க்கு மேல் அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்கள் இந்த EPFO திட்டங்களில் இருந்து விலகிச் செல்ல விருப்பம் உள்ளது. ஆனால், புதிய விதி அமலுக்கு வந்தால், இது மாறும்.

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி
EPFO-வின் மத்திய அறங்காவலர் குழு, இந்த விவாதம் குறித்து அடுத்த கூட்டத்தில், அதாவது டிசம்பர் அல்லது ஜனவரியில் நடைபெற உள்ள கூட்டத்தில் இறுதி ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தொழிலாளர் அமைச்சகத்தின் உள் மதிப்பீட்டின்படி, ஊதிய உச்சவரம்பில் மாதத்திற்கு ₹10,000 அதிகரிப்பு, 10 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்களுக்கு சமூக பாதுகாப்பு பலன்களைக் கட்டாயமாக்கும் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
பல பெருநகரங்களில் உள்ள குறைந்த அல்லது நடுத்தர திறன் கொண்ட தொழிலாளர்களின் மாதச் சம்பளம் ₹15,000 க்கும் அதிகமாக இருப்பதால், தொழிலாளர் சங்கங்கள் நீண்ட காலமாக ஊதிய உச்சவரம்பை உயர்த்த கோரி வருகின்றன. அதிக உச்சவரம்பு அவர்களை EPFO இன் ஒரு பகுதியாக மாற்றும்" என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
ஊழியரின் முழு 12% EPF கணக்கிற்கு செல்லும்
தற்போதைய விதிகளின்படி, ஒவ்வொரு மாதமும் ஊழியரின் சம்பளத்தில் 12% ஊழியரும், 12% முதலாளியும் பங்களிக்க வேண்டும். ஊழியரின் முழு 12% EPF கணக்கிற்கு செல்லும். அதே சமயம், முதலாளியின் 12% ஆனது EPF (3.67%) மற்றும் EPS (8.33%) இடையே பிரித்து அனுப்பப்படும்.
ஊதிய உச்சவரம்பை உயர்த்துவது EPF மற்றும் EPS நிதியையும் கணிசமாக அதிகரிக்கும். இது ஓய்வூதியத்தின் போது ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்களையும், வட்டி வருவாயையும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, EPFO-ன் மொத்த நிதி ₹26 லட்சம் கோடியாகவும், செயலில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 76 மில்லியனாகவும் உள்ளது.
ஊதிய உச்சவரம்பு உயர்வு, சமூக பாதுகாப்புத் திட்டத்தை விரிவுபடுத்தவும், தற்போதைய ஊதிய அளவுகளுடன் ஒத்துப்போகவும் ஒரு முற்போக்கான படியாகும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது இந்தியாவின் உழைக்கும் வர்க்கத்தில் ஒரு பெரிய பிரிவினருக்கு நீண்ட கால நிதி பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பலன்களை அணுக உதவும்.
அதேபோல் ஓய்வூதியதாரர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த மிகப்பெரிய சலுகையை 11 ஆண்டுகளுக்கு பின் மத்திய அரசு வெளியிட உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), EPS-95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ₹1,000 இலிருந்து ₹2,500 ஆக உயர்த்துவது குறித்து விவாதிக்க உள்ளது.
இந்த முக்கிய விவாதம், பெங்களூருவில் அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்டத்தில் நடைபெற உள்ளது. குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வுக்கான முன்மொழிவு இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
₹1,000 குறைந்தபட்ச ஓய்வூதியம்
தற்போதைய ₹1,000 குறைந்தபட்ச ஓய்வூதியம் 2014-ல் நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், பல தொழிற்சங்கங்கள் பல ஆண்டுகளாக கணிசமான உயர்வுக்கு கோரி வருகின்றன. ₹1,000 என்பது வாழ்வதற்கு போதுமானதல்ல என்று வாதிடுகின்றன.
சில தொழிற்சங்கங்கள் ஓய்வூதியத்தை ₹7,500 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரினாலும், EPFO வாரியம் ₹2,500 ஆக உயர்த்தும் மிதமான திருத்தத்தை பரிசீலிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இறுதி முடிவு அரசு ஒப்புதலுக்குப் பிறகே அமலுக்கு வரும்.












Click it and Unblock the Notifications