பெடரல் வங்கியில் அதிகாரி வேலை.. மாதம் 40 ஆயிரம் சம்பளம்! டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! விட்றாதீங்க
சென்னை: பெடரல் வங்கியில் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்களை இங்கு காணலாம்.
நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்று பெடரல் வங்கி. கடந்த 1931 ஆம் ஆண்டு கேரளாவில் தொடங்கப்பட்ட இந்த வங்கி, தற்போது நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த வங்கியில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பணியிடங்கள் விவரம்:
பெடரல் வங்கியில், அசோசியேட் அதிகாரி (விற்பனை) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.federal.bank.in/careers வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்கள் நாடு முழுவதும் உள்ள பெடரல் வங்கி கிளையில் பணியமர்த்தப்படுவார்கள்.
கல்வித் தகுதி:
ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 2025-2026 கல்வியாண்டில் படித்து, 2026 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெறுபவர்களும் நிபந்தனையின் அடிப்படையில் தகுதியுடையவர்கள் தான்.
2026 பிப்ரவரி 01ஆம் தேதி நிலவரப்படி, முந்தைய அனைத்து ஆண்டு/செமஸ்டர் தேர்வுகளிலும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு/டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு அனைத்திலும் குறைந்தபட்சம் 50% அல்லது அதற்கு மேல் ஒட்டுமொத்த மதிப்பெண்கள் பெற்றிருப்பதுடன், செல்லுபடியாகும் இந்திய ஓட்டுநர் உரிமம் (இரு சக்கர அல்லது நான்கு சக்கர) வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதை தாண்டி இருக்க கூடாது (01.02.1999 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும்). பட்டியல் சாதி/பழங்குடியினருக்கான உச்ச வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (01.02.1994 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும்).
சம்பளம் எவ்வளவு?
தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.4.64 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.6.70 லட்சம் சம்பளம் வழங்கப்படும். பணியாளரின் செயல்திறன், பணியிட இருப்பிடம் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் இந்தத் தொகை மாறுபடும்.
தேர்வு முறை:
தேர்வு முறையை பொறுத்தவரை குழு விவாதம் (Group Discussion), திறனறித் தேர்வு (Aptitude Test) மற்றும் நேர்காணல் (Personal Interview) ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் பட்டியல் சாதி/பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு ரூ.125/- ஆகும். மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.500/- ஆகும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நாள் பிப்ரவரி 20.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 04 ஆகும். தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்த பிறகு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://drive.google.com/file/d/15Egn8chEZieBLTPfnDBZGyH6Oeg7FUkv/view












Click it and Unblock the Notifications