ராமநாதபுரத்தில் 7 வயது சிறுமி சடலமாக கிடந்த வழக்கில் பகீர் திருப்பம்! சொந்த அத்தை செய்த படுபாதக செயல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்காக வந்திருந்த 7 வயது சிறுமி சாய் தீப்தி மறுநாள் அப்பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் உறவினர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், அண்ணன் பொண்ணு என்றும் பாராமல் சபரிகா இப்படியொரு காரியத்தை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இரவு பாட்டியுடன் படுத்திருந்த சிறுமி எப்படி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்? கொலையா? அல்லது சிறுமி தற்செயலாக விழுந்து இறந்தாரா? என விசாரணை செய்யப்பட்ட நிலையில் அத்தை சபரிகா அளித்த வாக்குமூலத்தால் உறவினர்கள் நடுங்கி போயினர்.

இரட்டை பெண் குழந்தைகள்
மதுரை பைக்காரா முத்துராமலிங்காபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பால கணேசன். இவரது மனைவி கார்த்திகை செல்வி. இவர்களுக்கு 7 வயதில் சாய் தீப்தி, சாரு நித்திகா என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். சிறுமிகள் இருவரும் மதுரையில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்கள். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் ராமநாதபுரத்தில் உள்ள தன் தாயார் வீட்டுக்கு கார்த்திகை செல்வி குழந்தைகளுடன் சென்றார்.
ராமநாதபுரம் அருகே உள்ள எம்எஸ்கே. நகர் கிராமத்திற்கு வந்தார். வழக்கமாக விடுமுறை என்றாலே கார்த்திகை செல்வி குடும்பத்துடன் வருவது வழக்கமாம். அந்த வகையில் தான் நேற்று முன் தினம் வந்திருக்கிறார். இரவில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். அப்போது கரண்ட் கட் ஆகிவிட்டதால், காற்றோட்டத்திற்காக சிறுமி சாய் தீப்தி, வீட்டு வாசலில் உள்ள திண்ணையில் தனது பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் எழுந்து பார்த்த போது சிறுமியை காணவில்லை.
பிணமாக மீட்கப்பட்ட சிறுமி
இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் சிறுமி சாய் தீப்தியை அக்கம் பக்கத்தில் தேடி அலைந்தனர். அந்த கிராமம் முழுவதும் தேடினர். அங்குள்ள குளம், கிணறுகளிலும் தேடினர். அப்போது சிறுமி தங்கியிருந்த வீட்டின் அருகிலுள்ள பாண்டியன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் மாயமான சிறுமி நேற்று மதியம் பிணமாக மிதந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சிறுமியின் உடலை மீட்டனர்.
சிறுமி உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி தானாக நடந்து சென்றபோது கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது யாராவது மர்ம நபர்கள் கடத்தி சென்று கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பல அதிர்ச்சிகர தகவல் வெளியானது.
அத்தையின் வாக்குமூலம்
சிறுமிகளின் உறவினர்கள் ஒவ்வொரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுமியின் அத்தையும், கார்த்திகை செல்வியின் அண்ணன் மனைவியுமான சபரிகா மட்டும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண் மற்றும் மேலும் இரு வாலிபர்களை ரகசிய இடத்தில் வைத்து துருவி துருவி விசாரித்தனர். அப்போது தான் சிறுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சபரிகா தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இன்று காலையில் சபரிகாவை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், "எனக்கு ஒரே ஒரு குழந்தை இருக்கு. ஆனால் அந்த குழந்தையும் மாற்றுத்திறனாளி. என்னுடைய குழந்தைக்கு எனது மாமியார் வீட்டில் முன்னுரிமையே அளிப்பதில்லை. அதற்கு மாறாக எனது கணவரின் தங்கை குழந்தைகளான இரட்டை குழந்தைகளுக்கு அதிக கொடுத்தார்கள். இதை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருந்தது.
துணியால் வாயை பொத்தி..
எனவேதான் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி நேற்று முன்தினம் விடுமுறைக்காக கார்த்திகை செல்வி குழந்தைகளுடன் எனது மாமியார் வீட்டிற்கு வந்திருந்தார். இரவில் சிறுமி சாய் தீப்தி திண்ணையில் தூங்கிக் கொண்டு இருந்தபோது, அவரது வாயை துணியால் பொத்தி நைசாக தூக்கி சென்று கொலை செய்தேன். பின்னர் நான் மாட்டிவிடக் கூடாது என்பதற்காக குழந்தையை கிணற்றில் தூக்கி வீசிவிட்டேன்" என்று கூறினார். பொறாமையில் அண்ணன் குழந்தையையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.















Click it and Unblock the Notifications