ஒயிட் காலர் ஜாப்-க்கு பலத்த அடி! அதல பாதாளத்திற்கு போகும் வேலைவாய்ப்புகள்? ஆய்வில் வெளியான ஷாக்
சென்னை: ஒயிட் காலர் ஜாப் எனப்படும் நிர்வாக பிரிவு, டெக்னாலஜி பிரிவு போன்ற உடல் உழைப்பு இல்லாத பணிகளில் சேருவதற்கே வேலை தேடும் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்த துறையில் வேலை வாய்ப்பு கணிசமாக குறைந்துள்ளதாக புதிய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
தற்போதைய கால கட்டத்தில் படித்த படிப்புக்குரிய வேலையை பெறுவது என்பது இளைஞர்களுக்கு பெரும் பாடாக உள்ளது. ஒருபக்கம் பணவீக்கம் மற்றொரு பக்கம் வேலை வாய்ப்பு இன்மை அதிகரிப்பது என படித்த இளைஞர்களின் பாடு படு திண்டாட்டமாகத்தான் உள்ளது.

ஒயிட் காலர் ஜாப் எனப்படும் நிர்வாக பிரிவு, டெக்னாலஜி பிரிவு போன்ற உடல் உழைப்பு இல்லாத பணிகளில் சேருவதற்கே வேலை தேடும் இளைஞர்கள் அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள். நல்ல சம்பளம், கவுரமான வேலை என்பதால் இத்தகைய பணிகளுக்கு வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருக்கும்.
இந்த நிலையில், நடப்பு ஆண்டில் இத்தகைய வேலைவாய்ப்புகள் வளர்ச்சியின் வேகம் பாதியாக குறைந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 2023-24 நிதி ஆண்டில் ஒயிட் காலர் பிரிவு வேலை வாய்ப்புகள் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்கு சரிந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்செக்சில் பட்டியலிடப்பட்ட 30 கம்பெனிகளின் வேலை வாய்ப்பு வளர்ச்சி என்பது 4.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. 2019 ஆம் நிதி ஆண்டில் 8.4 சதவிகிதமாக இருந்தது.
இதில் நிரந்தர பணிகளும் நீண்ட கால ஒப்பந்த பணிகளும் அடங்கும். டெக் மற்றும் நுகர்வோர் துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கு காரணம் என்று மனிதவள மேம்பாட்டு ஆய்வு தரவுகள் காட்டுகின்றன. கொரோனா கால ஏற்றத்திற்கு பிறகு கடந்த 12-15 மாதங்களாக டெக் துறை சவாலான சூழலை எதிர்கொண்டு வருகிறது. நுகர்வோர் துறையும் மந்தமாகியுள்ளது. இவை அனைத்தும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அத்துறையை சேர்ந்த முன்னணி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பார்லே நிறுவனத்தின் மயங்க் ஷா கூறுகையில், நுகர்வோர் தேவையை உருவாக்குவதற்கான மிக முக்கிய காரணியாக வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது உள்ளது" என்றார். தனித்த நிறுவனங்களில் எடுக்கபட்ட தரவுகளின் படி, அங்கும் வேலை வாய்ப்பு சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. இன்போசிஸ், எஸ்பிஐ, ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்களிலும் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது நடப்பு நிதி ஆண்டில் வேலை வாய்ப்பு சரிந்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 26 ஆயிரம் என சரிந்துள்ளது. டாடா மோட்டார்ஸ், அல்ட்ரா டெக் நிறுவனங்களில் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை உயர்ந்தாலும் மொத்த வேலை வாய்ப்பு என்பது சரிந்துள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் மட்டும் 38 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. ஜியோவில் 5,250 வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது. மத்திய அரசுசமீபத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் இருந்த விவரங்களும் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக வேலை வாய்ப்பு விகிதம் சரிந்ததை காட்டியிருந்தது.












Click it and Unblock the Notifications