மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலர் பதவிக்கு மீண்டும் உடல் தகுதி தேர்வு.. உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சிஆர்பிஎஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலர் பதவிக்கான உடல் தகுதி தேர்வானது முறையாக நடத்தப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், உடல் தகுதி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை, அசாம் ரைஃபிள்ஸ் படை, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு படை ஆகியவற்றுக்கு காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வது குறித்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது.

சிஆர்பிஎஃப் தேர்வு
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட இந்த பதவிகளுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு, சென்னை ஆவடி சிஆர்பிஎப் மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி உடல் தகுதி தேர்வு நடந்தது. இந்த உடல் தகுதி நடைபெற்ற நாளில் மழை கடுமையாக பெய்ததால், பலர் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீராம், ஸ்வேதா உள்பட 270-க்கும் மேற்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள், இறுதி விசாரணைக்காக நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடும்போது, ''மழை பெய்ததால் மைதானம் முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தது. அதில் எம்.சாண்ட் வேறு போட்டிருந்தனர். இதனால், 5 கிலோமீட்டர் தூரத்தை மனுதாரர்களால் 24 நிமிடத்தில் முடிக்க முடியவில்லை.
நீதிபதி உத்தரவு
அதுவும் மைதானம் பெரியதாக இருந்ததால் தூரமும் அதிகம் இருந்தது. கடந்த முறை நடந்த தேர்வில் 170 செ.மீ. உயரம் இருந்தவர்கள், 169.7 செ.மீ. இருப்பதாக கூறி அதிகாரிகள் அவர்களை தேர்வு செய்யவில்லை'' என்று கூறினர். இதற்கு தேர்வுக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இந்த வழக்கில் உத்தரவினை பிறப்பித்தார். அதாவது, மத்திய ரிசர்வ் படை காவலர் பதவிக்கு மீண்டும் உடல் தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவினை பிறப்பித்தார். நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது: -
மீண்டும் நடத்த வேண்டும்
உடல் தகுதி தேர்வு தொடர்பான வீடியோவை பார்த்தபோது, ஓடுதளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. எம்.சாண்ட் வேறு அதில் போடப்பட்டுள்ளது. 50 முதல் 100 பேரை ஒரே நேரத்தில் ஓடவிட்டுள்ளனர். இதனால், ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும், இடித்துக்கொண்டும் ஓடுகின்றனர். இந்த ஓட்டப்பந்தயம் முறையாக நடத்தப்படவில்லை. மேலும், உயரத்தை அளவிடுவதில், இந்த முறை டிஜிட்டல் முறையை கையாண்டுள்ளனர். அதுவும் அவசரகதியில் உயரத்தை அளந்துள்ளனர்.
எனவே, உடல் தகுதி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும். அதாவது மைதானத்தை ஆண்கள் 13 முறை சுற்றி வரவேண்டும். 1,600 மீட்டர் தூரத்தை பெண்கள் 4 முறை மைதானத்தை சுற்றி வரவேண்டும். எனவே, 13 சுற்றுகளை முடித்த ஆண்களுக்கும், 4 சுற்றுகளை முடித்த பெண்களுக்கும் மீண்டும் ஓட்டப்பந்தயப் போட்டியை நடத்த வேண்டும். அதேபோல, உயரத்தை அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் எந்திரத்தை கொண்டு மீண்டும் முறையாக அளவிட வேண்டும்" என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications