ஆசையாக இருந்த அரசு ஊழியர்களுக்கு ஷாக்.. பழைய ஓய்வூதியத் திட்டம் வராது.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டுவரும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என ஆகஸ்ட் 11, 2025 அன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 16-ஆம் நாளில், எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களால் லோக்சபா மற்றும் ராஜ்யசபா பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பழைய ஓய்வூதியத் திட்டமானது அரசாங்கத்திற்கு நிதி ரீதியாக நிலையற்ற சுமையை ஏற்படுத்துவதால், அதிலிருந்து விலகிவிட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.

தேசிய ஓய்வூதியத் திட்டம்
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது ஒரு வரையறுக்கப்பட்ட பங்களிப்பை அடிப்படையாகக் கொண்ட திட்டமாகும். இது 2004 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்காக (முப்படை வீரர்கள் தவிர) அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்தகைய ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்களை மேம்படுத்தும் நோக்கில், அப்போதைய நிதிச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைத்தது. அக்குழுவின் பரிந்துரைகளின்படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு வரையறுக்கப்பட்ட பலன்களை வழங்கும் நோக்கத்துடன், ஒரு விருப்பமாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என நிதியமைச்சர் கூறினார்.
பழைய ஓய்வூதியத் திட்டம்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் அம்சங்கள், நிதி நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தின் வரையறை உட்பட, இது உறுதியான பலன்களை வழங்குகிறது. மேலும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் அரசு ஊழியர்கள், பணியின் போது இறந்துவிட்டால் அல்லது உடல்நலக்குறைவு அல்லது இயலாமை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டால், CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021 அல்லது CCS (அசாதாரண ஓய்வூதியம்) விதிகள், 2023 ஆகியவற்றின் கீழ் உள்ள பலன்களையும் பெற தகுதியுடையவர்கள்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், 2025 ஜனவரி 24 அன்று அரசு அறிவிப்பின் மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒரு விருப்பமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தகுதி வாய்ந்த சேவைக்குப் பிறகு, ஓய்வு பெறுவதற்கு முந்தைய பன்னிரண்டு மாத சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாகப் பெறலாம்.
ஓய்வூதியம் வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
தகுதி வாய்ந்த சேவை காலம் குறைவாக இருந்தால், அதற்கேற்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஏற்கனவே மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யூபிஎஸ்) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், ஊழியர்கள் உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கும் (என்.பி.எஸ்) இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும் இடையே தேர்வு செய்யும் வாய்ப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தால் ஓய்வூதிய முறையில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய பாஜக அரசு பல முக்கிய நலத்திட்ட அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்புகள் சில விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வரிசையிலேயே இந்த புதிய ஓய்வூதிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications