தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்
சென்னை: தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்தலாமா?என்கிற ஒரு ஆலோசனையை அண்மையில் உயரதிகாரிகளுடன் நடத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58. மத்திய அரசின் சிவில் சர்விஸ் தேர்வு எழுதி பதவிக்கு வருகிற உயரதிகாரிகளுக்கு மட்டும் ஓய்வு பெறும் வயது 60. மற்றவர்களுக்கு 58 தான்.

அரசு ஊழியர்களுக்கு செட்டில்மென்ட்
கடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது நிலவிய நிதி நெருக்கடி, நிதி பற்றாக்குறை விவகாரங்களால் அரசு ஊழியர்களுக்கு செட்டில்மென்ட் மற்றும் ஒய்வூதியம் வழங்குவதில் சிக்கல் எழுந்தது. இதனையடுத்து, உயரதிகாரிகளிடம் விவாதித்தார் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, " அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தினால் போதும். சமாளித்து விடலாம். செட்டில்மெண்ட்ஓய்வுதியம் வழங்க வேண்டிய நெருக்கடியிலிருந்து தற்காலிகமாக ரிலீஃப் கிடைக்கும் " என்று அதிகாரிகள் கொடுத்த ஆலோசனையின் படி 60-ஆக உயர்த்தினார். அதுதான் தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போதைய திமுக ஆட்சியில், முந்தைய அரசை விட நிதி நெருக்கடிகள் உச்சத்தில் இருந்து வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதி உதவிகள், தேர்தலை முன்வைத்து அறிவிக்கப்படும் நிதி உதவிகள் என நிறைய நிதி சார்ந்த விசயங்களை முன்னெடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்கான நிதி ஒதுக்கீடுகள், மாற்றுத் திட்டங்களிலிருந்து மடை மாற்றம் செய்யப்படுகிறது.
ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை
இந்த சூழலில், நடப்பு நிதி ஆண்டில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை கொடுக்காமல் தவிர்த்தால், தேர்தல் நேரத்தில் அது பிரச்சனையாக வெடிக்கலாம். அது, தேவையற்ற அதிருப்திகளை உருவாக்கினால் அதனை சமாளிப்பதும் கடினம் என அதிகாரிகள் தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உயரதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளார் ஸ்டாலின். அப்போதுதான், ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தினால் சமாளிக்கலாம் என யோசனை சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம், இதற்கு உடனடி ஒப்புதலை கொடுக்காத முதல்வர் ஸ்டாலின், "அப்படி வயதை உயர்த்துவதன் மூலம், எதிர்கொள்ள வேண்டிய சட்டச் சிக்கல்கள், பாதகங்கள் என்ன? கிடைக்கும் பலன்கள் என்ன? என்பது பற்றி விரிவான ஒரு ரிப்போர்ட் கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். தற்போது, இந்த விவகாரம், அரசு ஊழியர்கள் மத்தியில் கசிந்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு தொடரும் குட் நியூஸ்
ஏற்கனவே தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்காகப் புதிய உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி, மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் கடைசி அடிப்படை ஊதியத்தில் 50% உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.
TAPS திட்டத்தின்கீழ், ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 10% ஓய்வூதிய நிதிக்கு செலுத்த வேண்டும். கூடுதல் நிதித் தேவையை மாநில அரசே ஏற்கும். இத்திட்டத்தால், ஓய்வூதிய நிதிக்கு ₹13,000 கோடி கூடுதல் செலவு அரசுக்கு உடனடியாக ஏற்படும்.
பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு இணையாக ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு உண்டு. ஒரு ஓய்வூதியதாரர் மரணமடைந்தால், அவர் பெற்றுவந்த ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாகப் பரிந்துரைக்கப்பட்ட பயனாளிகளுக்குக் கிடைக்கும். ஓய்வு அல்லது பணி மரணத்தின்போது, சேவை காலத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக ₹25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.
தகுதிச் சேவைக்காலம் நிறைவு செய்யாதவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) சேர்ந்து, TAPS அமலுக்கு முன்னர் ஓய்வூதியம் பெறாமல் ஓய்வு பெற்றவர்களுக்கு 'சிறப்பு கருணை ஓய்வூதியம்' உண்டு. மேலும், ஆண்டுதோறும் சுமார் ₹11,000 கோடி அரசு பங்களிக்க வேண்டும், இது ஊழியர்களின் ஊதியத்தைப் பொறுத்து அதிகரிக்கக்கூடும்.
- சிறப்பு நிரூபர் எழில்












Click it and Unblock the Notifications