கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் கடை வேலைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? மகிழ்ச்சியான செய்தி
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் காலியாக உள்ள ரேஷன் கடை ஊழியர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 25-ந் தேதி தொடங்க உள்ளதாக கன்னியாகுமரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி கூறியுள்ளார். நாகர்கோவில் புதுக்குடியிருப்பு மாடரேட்டர் ஞானதாசன் தொழில்நுட்ப கல்லூரியில் 25-11-2024 முதல் 2-12-2024 வரை நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் என 3 ஆயிரத்து 308 காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 9-ந் தேதி அந்தந்த மாவட்டங்களின் சார்பில் வெளியிடப்பட்டது .இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 7ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் விற்பனையாளர் பணிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.6,250 மாதம் வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.8,600 முதல் ரூ.29,000 வரை வழங்கப்படும் என்றும் கட்டுநர் பணிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.5,500 மாதம் வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.7,800 முதல் ரூ.26,000 வரை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தேர்வு முறை எப்படி என்றால்,. விண்ணப்பதார்களின் 10 மற்றும் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இட ஒதுக்கீடு மற்றும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நேரடியாக பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டிலும் சேர்த்து அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் பணி நியமனம் வழங்கப்படும் என்றும் அப்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டது. அதேநேரம் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அரசு ஒதுக்கீடு முறையில் ரேஷன் கடைகளில் பணி நியமனம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த பணிக்கு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட வாரியாக நேர்முகத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 35 விற்பனையாளர் மற்றும் 6 கட்டுனர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.
இதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு 25-11-2024 முதல் 2-12-2024 வரை நாகர்கோவில் புதுக்குடியிருப்பு மாடரேட்டர் ஞானதாசன் தொழில்நுட்ப கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. மேற்படி நேர்முக தேர்விற்கான அனுமதி சீட்டினை 18-11-24-ந் தேதி முதல் கன்னியாகுமரி மாவடட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளம் (www.drbkka.in) வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய குழுவின் பிரத்தியேக தொலைபேசி எண் 04652-278257 மற்றும் [email protected] என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு தகவல் பெற்று கொள்ளலாம்" இவ்வாறு கன்னியாகுமரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications