குரூப் 4 தேர்வர்களே.. நம்பிக்கையோட இருங்க.. பணியிடங்கள் அதிகரிப்பா? வெளியான குட் நியூஸ்!
சென்னை: விஏஓ, இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிந்துள்ளது. தற்போது , 3,935 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இது தோராயமான ஒரு எண்ணிக்கைதான் என்றும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த முறை குரூப் 4 தேர்வுக்கு முதலில் 6,244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு பின்னர் பணியிடங்கள் 9,532 ஆக உயர்த்தப்பட்டது. எனவே இந்த ஆண்டிலும் குரூப் 4 தேர்வில் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேர்வர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழகத்தில் அரசு பணி கனவுடன் இருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருப்பது டிஎன்பிஎஸ்சிதான். நன்றாக படித்து போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றால் வேலை நிச்சயம் என்பதால் இளைஞர்கள் பெரும் நம்பிக்கையுடன் இந்த தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.

குரூப் 4 தேர்வு
தமிழக அரசு துறைகளில் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது நிரப்பி வருகிறது. இதில் பத்தாம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வுக்குதான் தேர்வர்கள் மத்தியில் கடும் மவுசு இருக்கும். சில ஆயிரம் பணியிடங்களுக்கு கூட லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பிப்பது வழக்கம்.
விஏஓ, இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 தேர்வில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் போதும் நேரடியாக அரசு பணி கிடைத்துவிடும். நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது என்பதால் இந்த தேர்வில் வெற்றி பெற்று அரசு பணிக்கு சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் தேர்வர்கள் தயாராகி வருகிறார்கள்.
காலியிடங்கள் அதிகரிக்கப்படும்
தற்போது, 3,935 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு அவகாசம் முடிவடைந்துள்ளது. கடந்த மே 24 ஆம் தேதியுடன் விண்ணப்ப அவகாசம் முடிந்த நிலையில், சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கலாம் என்று தெரிகிறது. குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு குரூப் 4 - தேர்வில் முதலில் 6,244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.
பின்னர் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு 9,532 ஆக உயர்த்தப்பட்டது. எனவே இந்த ஆண்டிலும் குரூப் 4 தேர்வில் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் கூறுகையில், "இந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் 3,935 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தோராயமான ஒரு எண்ணிக்கைதான்.
நிச்சயம் அதிகரிக்க வாய்ப்பு
தேர்வுகள் முடிந்த பிறகு கவுன்சிலிங் தொடங்கும் வரை காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் வரும் போது குரூப் 4 காலியிடங்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்படும்.
எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது" என்றார். இதனால் குரூப் 4 தேர்வில் காலிப்பணியிடங்கள் அதிகரிக்கும் என்பதால், தேர்வர்கள் நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுமாறு கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications