அரசு கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர்கள் காலிப் பணியிடங்கள்.. அடுத்த 4 நாள் ரொம்ப முக்கியம்
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்விற்கு இன்று வரை விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பத்தை திருத்தம் செய்ய மே 19 வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில்4 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கடந்த மார்ச் 14-ம் தேதி வெளியிட்டது.

அதில் தகுதி வாய்ந்த பட்டதாரிகள் தேர்வுக்கு ஏப்ரல் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனிடைய செட் தேர்வு எழுத இருப்பவர்களையும் உதவி பேராசிரியர் பணித் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டுமென பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கைகள் வைத்தனர்.
அதையேற்று செட் தேர்வுக்கு எழுதவுள்ளவர்களும் உதவி பேராசிரியர் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்கள் ஜூனில் நடைபெறவுள்ள செட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உதவி பேராசிரியர் பணித் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தது.இதற்காக டிஆர்பி இணையதளத்தில் ( www.trb.tn.gov.in) சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதனிடையே இதுதவிர தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசமும் வரும் மே 15-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிவதற்கு முதுநிலை பட்டப் படிப்புடன் நெட்/செட் அல்லது பிஎச்டி முடித்திருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது செட் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில் ஆன்லைன் வாயிலான விண்ணப்பப் பதிவு இன்று (புதன்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. விண்ணப்பப் பதிவு செய்தவர்கள் தங்களுடைய ஆன்லைன் வழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள நாளை (வியாழக்கிழமை) முதல் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது.
விண்ணப்பங்களை சமர்ப்பித்து தேர்வு கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே திருத்தங்கள் மேற்கொள்ள முடியும். திருத்தங்களை மேற்கொண்ட பின், அதனை உறுதி செய்யவேண்டும். அவ்வாறு உறுதி செய்யாவிட்டால் விண்ணப்பம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. திருத்தங்களை மேற்கொண்டு சமர்ப்பித்தபின், எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications