குழந்தை நீதி கதைகள்: அட லூசுகளா.. அலுத்து கொண்ட வெட்டுக்கிளி!
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டீஸ்., எப்படி இருக்கீங்க.. நீங்க தினமும் ஒரு செயலை வழக்கமாக செய்து கொண்டிருந்து, அதை யாராவது கேலி செய்தால் நீங்க என்ன பண்ணுவீங்க, ஒருவேளை இனிமேல் யாராவது உங்களை கேலி செய்தால் கண்டிப்பா இந்த கதையை அவங்க கிட்ட சொல்லுங்க. இப்போ வாங்க கதைக்குள்ள போகலாம்.
ஒரு பெரிய கோதுமை தோட்டம் ஒன்று இருந்தது. அங்கு விவசாயி ஒருவன் ஒவ்வொரு வருடமும் கோதுமை சாகுபடி செய்து கொண்டிருந்தான். சாகுபடி செய்யும் இடங்களில் பொதுவாகவே பூச்சிகள், குருவிகள் நிறையவே நீங்கள் பார்க்கலாம். அந்த தோட்டத்தில் கோதுமை அறுவடை நாட்கள் நெருங்க ஆரம்பித்தன.

அறுவடை தொடங்கிய நாளில் இருந்து எறும்புகள் தங்கள் கூட்டத்துடன் வந்து கோதுமைகளை எடுத்து சென்றன. தோட்டத்தில் ஒரு வெட்டுக்கிளி படுத்துக்கொண்டு பாட்டு பாடி கொண்டே இருந்தது. அதுமட்டுமில்லாமல் அங்கு கூட்டமாக சென்று கொண்டிருந்த எறும்புகளை கேலி செய்தது.
அந்த கூட்டத்தை பார்த்து கேலி செய்து பாட்டு பாடியது வெட்டுக்கிளி. ஆனால் அதை காதில் வாங்கி கொள்ளாமல் கோதுமையை தூக்கி கொண்டு நடந்து சென்றன. ஆனாலும் விடாமல் தினமும் எறும்பு கூட்டத்தை வம்பிழுத்து கொண்டே இருந்தது வெட்டுக்கிளி.
இப்படி தினமும் எடுத்துட்டு போய் என்ன செய்ய போறீங்க லூசுகளா என வெட்டுக்கிளி கேட்க, அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் வரிசையாக சென்றன. அறுவடை நாளும் முடிந்தது. வெட்டுக்கிளி அன்றாடம் தோட்டத்தில் இருந்து கோதுமையை சாப்பிட்ட நிலையில் தோட்டம் எதுவும் இல்லாமல் வெறிசோடியது.
வெயில் காலம் என்பதால் வெட்டுக்கிளி வெயிலில் அலைந்து திரிந்து தனக்கான உணவை தேடி கண்டுபிடித்து நாட்களை ஓட்டியது. எறும்புகளும் தங்கள் கூட்டத்துடன் தினமும் உணவுகளை சுமந்து செல்வதை விடாமல் செய்து வந்தன.
ஒரு வழியாக வெயில்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்க ஆரம்பித்தது. எறும்புகளால் வெளியில் இறங்கி உணவை தேடி செல்ல முடியாததால் சேர்த்து வைத்த உணவை எடுத்து உண்டன. அதே சமயம் வெட்டுக்கிளியால் உணவை தேடி செல்ல முடியவில்லை. சேமிக்க வேண்டிய நேரத்தில் எறும்புகளை கேலி செய்து பாட்டு பாடி வம்பிழுத்த வெட்டுக்கிளியால் இரையை தேடி மழையில் செல்ல முடியாமல் அவதிப்பட்டது.
தங்கள் கூட்டத்தையே கேலி செய்திருந்தாலும் எறும்பு வெட்டுக்கிளி படும் கஷ்டத்தை பார்த்து பரிதாபம் கொண்டன. தாங்கள் சேமித்து வைத்த உணவில் இருந்து வெட்டுக்கிளிக்கு உணவை பகிர்ந்து கொண்டன. மழைக்காலம் முடியும் வரை வெட்டுக்கிளியையும் தங்களில் ஒருவராக பார்த்து கொண்டன.
எறும்புகளை கேலி செய்தும் வெட்டுக்கிளிக்கு உதவியதை எண்ணிய வெட்டுக்கிளி தனது தவறை உணர்ந்தது. நீங்கள் சிறுக சிறுக செய்தாலும் பின்னாளில் உங்களுக்கு அது உதவியுள்ளது. உங்களை கேலி செய்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள் என்று கெஞ்சியது. எறும்புகளும் வெட்டுக்கிளியை மன்னித்தன.
ஆகவே குழந்தைகளா! ஒரே நாளில் எல்லாம் படித்து முடித்து விடலாம் என எண்ணாமல் கொஞ்சம் கொஞ்சமாக படித்து வைத்தால் பின்னாளில் உங்களுக்கு அது உதவும். இது படிப்பில் மட்டுமில்லாமல் எல்லாவற்றிக்கும் பொருந்தும் என்பதை மறக்க வேண்டாம்.












Click it and Unblock the Notifications