குழந்தை நீதி கதைகள்: முட்டையும்.. வாக்குறுதியும்..!
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டீஸ், எப்படி இருக்கீங்க.. உங்களில் பறவைகள் என்றால் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும். இன்னைக்கு நீங்க படிக்க போற கதையில் இரட்டையர்களுக்கும் பறவைக்கும் என்ன தொடர்புன்னு படிச்சு தெரிஞ்சிக்கலாமா..
ஜிம், ஜாக் ரெண்டு பேருமே இரட்டையர்கள். இருவரும் விளையாடுவதில் தொடங்கி என்ன செய்தாலும் ஒன்றாகத்தான் செய்வார்கள். அதை பார்த்து அவங்களோட அம்மாக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் இந்த ஒரு விஷயம் மட்டும் அவங்களுக்கு பிடிக்கவே இல்லை.

இருவரும் மரத்தில் ஏறி, பறவைகளின் முட்டைகளை திருடி கொண்டு வந்து வீட்டில் வைப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்து வந்தார்கள். இது அவங்க அம்மாக்கு சுத்தமா பிடிக்கல, பலமுறை சொல்லியும் அழகான சின்ன சின்ன குருவிகளின் முட்டைகளை திருடி கொண்டு வந்து சேர்த்தார்கள். அதை வைத்து சந்தோசப்படும்போதெல்லாம் அவர்களின் அம்மா, இப்படியே செய்தால் பறவைகளே இல்லாமல் போய்விடும். அதை கொடுத்துவிடுங்கள் என்று பலமுறை சொல்லியும் அவர்களுக்கு அந்த சின்ன குருவிகளிடம் இருந்து திருடுவது நன்றாக இருந்தது.
அம்மா இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்து, அவர்களுக்கு அழகான கண்ணாடிகளால் ஆன கோலிக்கா (மார்ப்பிள்ஸ்) வாங்கி கொடுக்க முடிவு செய்தார். அதற்கு பதிலாக ஜிம், ஜாக் இருவரும் பறவைகளின் முட்டைகளை திருட கூடாது என சத்தியம் வாங்கி கொண்டார்.
கடையில் இருந்து மிகவும் அழகான 8 கோலிக்காவை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். அதன் உள்ளே உற்றுப்பார்த்தால் பலவிதமாக டிசைன்கள் தெரிய, அதை தனது பள்ளி நண்பர்களுக்கும் காண்பித்து மகிழ்ந்தார்கள். பலரும் அதை கொடுத்தால் இனிப்பு, சாக்லேட் , பொம்மை தருகிறேன் என சொல்லியும் இருவரும் அதை கொடுக்க மறுத்து அதை பொத்தி பொத்தி வைத்துக்கொண்டார்கள்.
அப்படியே இருவரும், முட்டைகளை திருடுவதை மறந்தும் போனார்கள். இருவரும் கொடுத்த வாக்கை பின்பற்றுகிறார்கள் என அம்மாவும் மகிழ்ச்சியில் இருந்தார். அன்று ஒருநாள் பள்ளியில் இருந்து திரும்பி வீட்டுக்கு வர, ஜிம் ஒரு பழைய வீட்டின் பொந்தில் அழகான சிட்டுக்குருவி வெளியில் வருவதை பார்த்தான். ஜாக், கண்டிப்பாக அதில் முட்டை இருக்கும் வா, போய் பார்க்கலாம் என சொல்ல இருவரும் அதை பார்த்தால் உள்ளே 3 முட்டைகள் இருந்தது.
உடனே ஜிம் அதை எடுக்க, ஜாக் நாம் அம்மாவிற்கு வாக்கு கொடுத்துள்ளோம். இதை நாம் செய்யக்கூடாது என்று சொல்லியும் கேட்காமல் ஜிம் அதை எடுத்து கையில் பார்த்தான். இருவருக்கும் முட்டையின் மேல், ஆசை வர அப்போது அந்த சிட்டுக்குருவி திரும்பி வந்தது. இருவரிடமும் தனது முட்டையை திருப்பி கேட்டது. இருவரும் சத்தமாக சிரிக்க, அந்த குருவி இருவரையும் கொத்தியது. ஆனால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முட்டையை தூக்கி கொண்டு இருவரும் வீட்டுக்கு செல்ல, அந்த நேரம் அங்கு 2 காக்கைகள் வர சிட்டுக்குருவியை பார்த்தது.
நடந்தவற்றை சிட்டுக்குருவி காகத்திடம் சொல்ல, இவர்கள் எங்களது முட்டைகளை கூட திருடிவிட்டார்கள். கண்டிப்பாக அவன் முட்டை வைத்திருப்பான். நாம் அதை திருடலாம் என்று காகம் சிட்டுக்குருவியிடம் சொன்னது.
காகங்கள், ஜிம், ஜாக் வீட்டிற்குள் சுற்றி வந்தன. அவர்கள் கண்களுக்கு ஏதும் புலப்படவில்லை. அதே சமயம் அவர்கள் கொண்டு வந்த முட்டையை பார்த்த அம்மா, மீண்டும் நீங்கள் இப்படி செய்திருக்க கூடாது. அந்த குருவிகள் பாவம் என கோவப்பட்டு சென்றார். காகங்கள் விட்டபாடில்லை. மாடியின் ஜன்னல் வழியாக, உள்ளே சென்றது. ஒரு பௌலில் நல்ல மிருதுவான துணியால் சுற்றப்பட்ட கோலிக்காவை பார்த்ததும் இதோ முட்டைகள் என்றது ஒரு காகம். இல்லை இல்லை என்றது இன்னொரு காகம். அவர்கள் நன்றாக பொதிந்து வைத்துள்ளார்கள், இதுதான் என அந்த கோலிக்காவை தூக்கி சென்றது.

இதை கவனிக்காத ஜிம், ஜாக் திருடிய முட்டைகளை ரசித்து கொண்டிருந்தார்கள். அதற்குள் இவர்கள் வைத்திருந்த கோலிக்காய்களை மொத்தமாக தூக்கி சென்று ஒரு பெரிய கோபுரத்தின் உச்சியில் வைத்தது. மேலே ஓடி வந்து பார்த்த ஜிம், ஜாக் கதறி அழுதார்கள். அவர்களது அம்மா, நீங்கள் கொடுத்த வாக்கை மீறி, பாவம் அந்த குருவியின் முட்டையை திருடினீர்கள், அதற்கு பதில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றை அது தூக்கி சென்றது. இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள், கொடுத்த வாக்கை மீறும்போது நமக்கு பிடித்தவற்றை இழக்க நேரிடும் என்றார்.
இருவரும் மன்னித்து விடுங்கள் என அம்மாவிடம் கேட்க, கண்டிப்பாக மன்னிப்பேன். ஆனால் இந்த தவறை நீங்கள் மீண்டும் செய்தால் எனது அன்பை இழக்க நேரிடுவீர்கள் என்று எச்சரித்தார். தினமும் தங்கள் கோலிக்கா அந்த கட்டடத்தின் உச்சியில் இருப்பதை பார்ப்பதாலேயே இருவரும் அதன் பிறகு எந்த பறவையின் முட்டைகளையும் திருடவில்லை. அம்மாக்கு கொடுத்த வாக்கையும் மீறவில்லை.












Click it and Unblock the Notifications