இந்தியாவின் டெட்ராய்ட் சென்னையில் MSME-க்கள் எப்படி உள்ளன? வேலை வாய்ப்புகள் அதிகரிக்குமா?
இந்திய ஆட்டோமொபைல் & உதிரி பாகங்கள் பிரிவில், குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கு மிகவும் அத்தியாவசியமானது. குறிப்பாக இந்தியாவின் உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்களில் 70 - 80%-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எம்.எஸ்.எம்.இ -யின் கீழ் வருகின்றன. வாகனங்களை தயாரிப்பது பெரிய பெரிய நிறுவனங்கள் தான் என்றாலும், அவற்றிற்கு OEMs (Original Equipment manufacturer) ஆக இருக்கும் எம்.எஸ்.எம்.இ -க்கள் தான் டயர் 1, டயர் 2 மற்றும் டயர் 3 சப்ளையளர்களாகவும் செயல்படுகின்றனர்.

என்னென்ன தயாரிக்கின்றன?
குறிப்பாக எம்.எஸ்.எம்.இ-க்கள் வாகனங்களுக்கு தேவையான சிக்கலான இன்ஜின் பாகங்கள், கேமராக்கள், சென்சார்கள், எலக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட்கள் (ECUs), ஃபவுண்ட்ரி தயாரிப்புகள், போர்ஜிங் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள், சிலிண்டர் ஹெட், கிராங்க் ஷாப்ட், கனெக்டிங் ராட், கியர் பாகங்கள், வால்வு கைடுகள், ராக்கர் ஆர்ம்ஸ், பம்ப் பாகங்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், பேட்டரி பாகங்கள், சேஸ் மற்றும் சஸ்பென்ஷன் பாகங்கள், இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் பாகங்கள், சீட் பாகங்கள், ரப்பர் பொருட்கள், கண்ணாடி பாகங்கள், மின்சார வாகனங்களுக்கு தேவையான பாகங்கள் உள்ளிட்ட முக்கியமான பாகங்களை தயாரிக்கின்றன. இவை பெரும்பாலும் பெரிய நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் துணை அசெம்பிளிகள் ஆகவும் உள்ளன. சில அடிப்படை பாகங்களை வழங்குவதன் மூலம், ஒட்டுமொத்த உற்பத்தி சங்கிலியின் வலிமையை உறுதி செய்கின்றன. எம்.எஸ்.எம்.இ-க்களின் நெகிழ்வுத்தன்மை, சுறுசுறுப்பு காரணமாக, சிறிய அளவிலான தயாரிப்புகள் மற்றும் புதிய வடிவமைப்புகளை விரைவில் உருவாக்கி, தேவைக்கேற்ப விநியோகிக்க முடிகிறது.
எந்தெந்த பகுதிகளில் அதிகம்?
சென்னை இந்தியாவின் டெட்ராய்ட் அல்லது ஆட்டோமொபைல் தலைநகரம் என அழைக்கப்படுகிறது. ஏனெனில் ஹூண்டாய், ரெனோ-நிசான், பிஎம்டபிள்யூ, ஃபோர்டு (உற்பத்தி நிறுத்தப்பட்டாலும் அதன் சப்ளையர்கள் தொடர்ந்து செயல்படுகின்றனர்) மற்றும் அசோக் லேலண்ட், ராயல் என்பீல்டு போன்ற பல பெரிய சர்வதேச மற்றும் உள்நாட்டு வாகன நிறுவனங்கள் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளன. இந்தியாவின் மொத்த கார் உற்பத்தியில் சுமார் 30%-க்கு அதிகமாகவும், உதிரி பாகங்கள் ஏற்றுமதியில் 35%-க்கும் அதிகமாகவும் சென்னை பங்களிக்கிறது. இதனால் தான் இந்தியாவின் டெட்ராய்ட் என கூறப்படுகிறது. இதற்கிடையில் தான் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அசல் உபகரண தயாரிப்பாளர்களின் (OEMs) தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் தான் இவர்களுக்கு அருகில் ஆயிரக்கணக்கான எம்.எஸ்.எம்.இ சப்ளையர்கள் உள்ளனர். சென்னையில் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூரில் ஏராளமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு நிறுவனங்கள் அமைந்துள்ளன. சென்னையை அடுத்து ஓரகடம், மறைமலை நகர், அம்பத்தூர், கிண்டி, வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் எம்.எஸ்.எம்.இ-க்கள் ஆங்காங்கே உள்ளனர்.
சென்னையை அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பது ஓசூர். இருசக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் உதிரி பாகங்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. டிவிஎஸ் குழுமம் போன்ற பல பெரிய நிறுவனங்களின் இருப்பால், இங்கும் அதிகளவிலான எம்.எஸ்.எம்.இ-க்கள் உள்ளன. அடுத்தடுத்த இடங்களாக கோயம்புத்தூர், திருச்சி போன்றவை அடங்கும்.
ஏற்றுமதி நிலவரம் என்ன?
இந்திய ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் ஏற்றுமதியானது கடந்த 2024 - 2025ம் நிதியாண்டில் சுமார் 22.9 பில்லியன் டாலராகும். இது முந்தைய ஆண்டை காட்டிலும் 8% வளர்ச்சியாகும். இதில் எம்.எஸ்.எம்.இ-களின் பங்கு குறித்து தெளிவான தரவுகள் இல்லை. இருப்பினும் 40 - 50% வரையில் பங்களிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வேலைவாய்ப்பில் பங்கு?
இந்திய ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாகங்கள் துறையில், எம்.எஸ்.எம்.இ-க்களின் பங்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதில் மிக முக்கியமானது. இந்திய ஆட்டோ உதிரி பாகங்கள் துறையானது சுமார் 15 லட்சம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பை வழங்குகிறது. இந்த மொத்த நேரடி வேலைகளில் கணிசமான பகுதி எம்.எஸ்.எம்.இ- களிலேயே உள்ளது. இதில் விநியோகம், சேவை, பழுதுபார்ப்பு மற்றும் சப்ளை சங்கிலியில் உள்ள பிற துறைகளில் எம்.எஸ்.எம்.இ-க்கள் மேலும் பல லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பை வழங்குகிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரம் என்பதால், இங்கு எம் எஸ் எம் இ-க்கள் மூலம் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது.
அரசின் கொள்கைகள் மற்றும் EV துறையின் வளர்ச்சி, தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் வளர்ச்சி காரணமாக, இந்த வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications