ரேசன் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை மிஸ்ஸிங்.. 10 சதவீத போனஸ் வேணாம்.. கருப்பு சட்டையோடு கிளம்பிய கோரிக்கை
சென்னை: தீபாவளி பண்டிகைக்கான, வேலை நாட்களை ஈடுசெய்யும் வகையில், தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், புது சிக்கல் ஒன்று கிளம்பி உள்ளது.
வரும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாட தமிழக மக்கள் தயாராகி வருகிறார்கள்.. இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு, தமிழக உணவுத்துறையானது, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
விடுமுறை: அதில், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) தீபாவளி பண்டிகை வரும் நிலையில், அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையான நவம்பர் 5ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பொருட்களை மக்கள் முன்கூட்டியே வாங்குவார்கள் என்பதால் தேவையான அரிசி, சர்க்கரை, பருப்பு ஆகியவற்றை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும், மக்கள் இன்றைய நாளை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வாங்கி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுமாறும் அந்த அறிவிப்பில் கேட்டுக் கொண்டிருந்தது.
விடுமுறைகள்: அதன்படியே, கடந்த 5ம்தேதி தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் இயங்கின.. பொதுமக்களும் ரேஷன் பொருட்களை தவறாமல் சென்று பெற்றுக் கொண்டனர். இந்நிலையில், இன்னொரு அறிவிப்பு நேற்றிரவு வெளியானது.
அதில், விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளுக்கு நவம்பர் 13 மற்றும் 25-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி கடந்த 3ம் தேதியும், நாளையும் வேலை நாட்களாக இருப்பதால் அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றாலும் போனஸ் விஷயத்தில் ஊழியர்கள் சற்று அப்செட்தான் என்கிறார்கள்.
காரணம், மற்ற அரசு ஊழியர்களை போலவேதான், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து அரசு தரப்பில் அறிவிப்பும் வெளியானது.
கருணைத்தொகை: "போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கடந்த ஆண்டைபோலவே அவர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
போனஸ் சட்டத்தின்கீழ் வராத தலைமைச் சங்கங்கள், மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2400-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகை யாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதற்குத்தான் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாம். இதுகுறித்து தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கை இதுதான்:
கருப்பு சட்டை: "ரேஷன் ஊழியர்களுக்கு விடுமுறை நாளில் வேலை செய்ததற்கு மாற்று விடுப்பு கூடுதல் பணி செய்ததற்கு ஊக்கத்தொகை தொகை என எதையும் அரசு வழங்கவில்லை.
தற்போது 10 சதவீத போனஸ் அறிவிப்பை திரும்ப பெற்று 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தியும் எங்கள் எதிர்ப்பைதெரிவிக்கும் வகையில் 10, 11ம் தேதிகளான இன்றும் நாளையும் ரேஷன் ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்துபணிபுரிவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications