ஆடும் பாஜகவின் அஸ்திவாரம்! ஒன்று கூடி மாஸ் காட்டிய 'ஜாட்' மக்கள்.. குஜராத்தில் தேர்தலில் ட்விஸ்ட்?
காந்திநகர்: குஜராத்தில் 'துத்சாகர்' பால் பண்ணையின் 2 லட்சம் உறுப்பினர்கள் சமீபத்தில் ஒன்றுகூடியிருந்தது பாஜக இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பால் பண்ணையின் முன்னாள் தலைவர் விபுல் சவுத்ரியின் விடுதலையை இவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜாட் சமூகத்தினராவார்கள்.
குஜராத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளில் 30 தொகுதிகளில் இந்த சமூகத்தினரின் கைதான் ஓங்கி இருக்கிறது என்பதே பாஜகவின் கலக்கத்திற்கு காரணமாகும்.

அற்புத சேனா
குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுவதற்கு இன்றும் சில நாட்கள்தான் இருக்கிறது. இந்நிலையில், ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஒன்றிணைந்து தங்கள் பலத்தை வெளிப்படுத்தியிருப்பது ஆளும் பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத்தில் துத்சாகர் பால் பண்ணை இயங்கி வருகிறது. இந்த பண்ணையின் முன்னாள் தலைவராக இருந்தவர்தான் 'விபுல் சவுத்ரி'. இவர் 'அற்புத சேனா' என்கிற அமைப்பை உருவாக்கினார். இதில் விவசாயம் மற்றும் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 1,253 கிராமங்களைச் சேர்ந்த சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஜாட் சமூக மக்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

பிறந்தநாள் விழா
இந்நிலையில், விபுல் சவுத்ரி துத்சாகர் பால்பண்ணை தலைவராக இருந்தபோது ரூ.800 கோடி முறைகேடு செய்ததாக கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இது ஜாட் சமூக மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் விபுல் இன்னமும் விடுதலை செய்யப்படாதது இவர்களிடத்தில் பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியது. இந்நிலையில் தேர்தல் நெருங்குவதால் தங்கள் பலத்தை ஆளும் கட்சிக்கு காட்ட சுமார் 2 லட்சம் ஜாட் சமூக மக்கள் ஓரணியில் திரண்டு விபுலின் தந்தையும் துத்சாகர் பால் பண்ணையின் நிறுவனருமான 'மான்சின் சவுத்ரியின்' 103வது பிறந்த நாள் விழாவை குஜராத் தலைமை செயலகத்திற்கு அருகே நடத்தி இருக்கிறார்கள்.

பாஜக உறுப்பினர்
விபுல் தற்போது வரை பாஜகவில் உறுப்பினராகதான் இருக்கிறார். ஆனால் இந்த கூட்டத்தில் பேசிய விபுலின் உதவியாளர், "அற்புத சேனாவில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த தேர்தலில் தலைவர் விபுல் அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து எதுவும் அவர் கூறவில்லை. அவர் என்ன சொல்கிறாறோ அதைதான் நாங்கள் பின்பற்றுவோம்" என்று கூறியுள்ளார். மேலும், "தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் எந்த முடிவையும் எங்களிடம் கூறவில்லை. அவர் எந்த முடிவெடுத்தாலும் அதற்கு நாங்கள் உறுதுணையாய் நிற்போம்.

சிங்கம்
தற்போது வரை அவர் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிறது. இந்த மாதம் 21ம் தேதி அவர் சிறையிலிருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிறந்தநாள் கொண்டாட்ட மேடை. அரசியல் மேடையல்ல. எனவே இங்கு நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. அவர் இல்லாமல் இந்த அமைப்பை நாங்கள் நடத்தி வருகிறோம். எனவே எந்த பிரச்னையும் செய்யாமல் இருக்க வேண்டியது எங்கள் கடமை. இந்த கூட்டத்தையே நடத்த விடாமல் தடுக்க சிலர் முயன்றனர். ஆனால் நாங்கள் இதனை நடத்தியுள்ளோம். எங்கள் சிங்கம் விபுல் விரைவில் வெளிவருவார்" என்று கூறியுள்ளார்.

நெருக்கடி
துத்சாகர் பால்பண்ணை பாஜக உறுப்பினர்களால் நடத்தப்பட்டு வந்தாலும் கூட விபுல் சொல்வதுதான் இவர்களின் இறுதி முடிவு. இவ்வாறு இருக்கையில் விபுல் மற்றும் சில அற்புத சேனா தலைவர்கள் கடந்த காலகட்டங்களில் பாஜக தலைமை மீது தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்துள்ளனர். அற்புத சேனா அரசியலுக்காக உருவாக்கப்படவில்லை என்றாலும், தேர்தல் நேரங்களில் அரசியலிலிருந்து விலகி இருக்க முடியாது என்றும் அமைப்பினர் கூறியுள்ளனர். இது ஆளும் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications