தேவாரத்தை அனுப்புங்கள் ... ஜெ. மீண்டும் ஆவேசம்
சென்னை:
வீரப்பனை சுட்டுத் தள்ள முன்னாள் டி.ஜி.பி. தேவாரத்தை அனுப்ப வேண்டும் என்கிறார் ஜெயலலிதா.
வீரப்பன் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதன் கிழமை வெளியிட்ட இரண்டாவது அறிக்கை:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதால் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பதறிப் போயிருக்கிறார். தமிழக முதல்வர் கருணாநிதியோ எதுவுமே நடக்காதது போலதினம் விழாக்களில் பங்கேற்று வருகிறார். இது ஒன்றே கடத்தல் நாடகத்தின் காரணகர்த்தா கருணாநிதி தான் என்பதற்குப் போதுமான சான்று.
ராஜ்குமார் கடத்தப்பட்ட மறுநாள் காலையிலேயே மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியிடம், கர்நாடக முதல்வர் பேசி, மத்திய அரசு தலையிட்டுஉதவ வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், அத்வானி இதுவரை எதுவும் பதில் சொல்லவில்லை என்று அவரே வேதனையுடன் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு பெங்களூர் வந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், திருடர்களை, கொலைகாரர்களை பிடிக்க ராணுவத்தை அனுப்பமுடியாது. இது காவல் துறையினர் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை என்று கூறி தட்டிக் கழித்து விட்டார்.
வீரப்பனின் ஆடியோ கேசட் 4.8.2000 அன்று சன் டி.வி.யிலும், உதயா டி.வி.யிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு எப்படி அந்த கேசட் வந்தது?இதிலிருந்து தெரியவில்லையா கடத்தல் நாடகத்தின் சூத்திரதாரி கருணாநிதி தான் என்று.
வீரப்பனால் கொல்லப்பட்ட 130 பேரில் 119 பேர் தமிழர்கள். 119 தமிழர்களை படுகொலை செய்த வீரப்பனை தமிழர் தலைவர் என போற்றுவதுஅடுக்குமா? இந்த கொடியவனுக்கு பொதுமன்னிப்பு தர வேண்டும் என்று ராமதாஸ், வைகோ, ரங்கராஜன் குமாரமங்கலம் போன்றவர்கள்கூறியிருப்பது வெட்கக் கேடு.
18 நாட்களாக வீரப்பன் பிடியில் இருக்கும் ராஜ்குமார், வெளியுலகுக்காக வேண்டுமானால் நன்றாக இருப்பதாக கூறலாம். அடர்ந்த காட்டுப் பகுதியின்ஒழுங்கற்ற சூழ்நிலை அவரது உடல்நிலைக்குக் கேடு விளைவிக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
வீரப்பன் கேட்ட 16 கோடி ரூபாயில் 5 கோடி ரூபாய் அவனிடம் சென்று சேர்ந்து விட்டதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன. எனதுஆட்சிக்காலத்தில் வீரப்பனால் கடத்தப்பட்டவர்களை மீட்க பணம் கொடுத்ததாக நக்கீரன் கோபால் கூறியுள்ளார்.
அப்படி எந்த பணமும் நாங்கள் கொடுக்கவில்லை. கோபால் போன்ற பிளாக்மெயில் ஏஜென்ட் பேர்வழிகளை நான் அணுக விட்டதே இல்லை. வீரப்பனின்கோரிக்கைகளை இரு மாநில அரசுகளும் ஏற்கக் கூடாது. கொடூரமான கொலைகாரன் வீரப்பன் பற்றி நான் சொன்ன கருத்தை தான் ஜனாதிபதிகே.ஆர்.நாராயணனும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடனும், உள்நாட்டுத் தீவிரவாத அமைப்புகளுடனும் தொடர்பு வைத்துள்ள சந்தன மரக் கடத்தல்காரன் வீரப்பனை பிடிப்பதற்கு அவன்பதுங்கியுள்ள காட்டுப் பகுதியைப் பற்றி நன்கு அறிந்த முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் தலைமையில் மத்திய அரசு தனி அதிரடிப் படையை அமைத்து, அவனைச்சுற்றி வளைத்து சுட்டுத் தள்ள வேண்டும்.
கருணாநிதி அரசின் மக்கள் விரோதப் போக்கையும், லஞ்ச ஊழல்களையும் மறைப்பதற்குத் திட்டமிட்டு வீரப்பன் நடத்தியுள்ள கடத்தல் நாடகத்தை விரைவில்முடிவுக்குக் கொண்டு வந்து ராஜ்குமாரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தனது கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications