கிரிக்கெட் ஊழல் பணத்தை முடக்க கோரிக்கை
சென்னை:
கிரிக்கெட் வீரர்களின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் க.ராசாராம் அறிக்கையில் கூறியுள்ளார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் க.ராசாராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏ.சி.முத்தையா தலைமையில் இயங்கி வரும் கிரிக்கெட் வாரியம் கடந்தசில மாதங்களாக நடத்திய விசாரணையின் முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன.
கிரிக்கெட் வாரியம், நமது விளையாட்டு வீரர்கள் நாட்டைக் காட்டிக் கொடுக்கின்ற வகையில் அண்டை நாட்டுக்காரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு நமது நாட்டின் மானத்தையே விற்றார்களா? என்பதை முன்னாள் சி.பி.ஐ இயக்குனர், மாதவன் மூலம் நன்கு விசாரித்து நல்ல தீர்ப்பைவழங்கியுள்ளார்.
அதன்படி கேப்டன் அசாரூதின், ஜடேஜா, அஜய்சர்மா, மனோஜ் பிரபாகர் மற்றும் டாக்டர் அலி ராணி ஆகியோருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இவர்கள் பெரும் பணம் பெற்றுள்ளார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், இது சாதாரணமாகத் தோன்றக் கூடும். ஆனால் உலக நாடுகள் முன்னிலையில், இது நமது நாட்டிற்கேதலைகுனிவை ஏற்படுத்திவிட்டது என்றே நாட்டு நலனில் அக்கறை உள்ள எவரும் கருதுவார்கள்.
கிரிக்கெட் வீரர்கள், ஆயுட்காலம் முழுவதும் விளையாடக் கூடாது என்பது பெரிய தண்டனையாகத் தெரியவில்லை. தங்களுக்கு கிடைத்த பணத்தைவைத்துக்கொண்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் ஏ.சி.முத்தையாவின் நிறுவனங்களையே விலைக்குக் கேட்டாலும் கேட்பார்கள்.
கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடம் இருந்து நாட்டையே விற்ற இந்த துரோக கும்பலிடம் இருந்து அவர்கள் பெற்ற ஊழல் பணத்தையெல்லாம் அரசுத்துறையின் மூலம் பறிமுதல் செய்து எதிர்காலத்தில் யாரும் இப்படி நடக்காவண்ணம் செய்ய வேண்டும்.
வியாபாரத்தில் யாராவது கருப்புப் பணம் சம்பாதித்து விட்டார் என்றால் வருமான வரித்துறை அந்த வியாபாரியின் வீட்டை பல முறை சோதனைபோடுகின்றது. ஏதாவது கணக்கில் வராத பணம் இருந்தால் உடனே பறிமுதல் செய்கிறது. அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறது.
எனவே நாட்டையே காட்டிக் கொடுத்தவர்களுக்கு கருணை காட்டலாமா? ஆயுட்காலம் முமுழுவதும் விளையாடக் கூடாது என்கிற தண்டனை மட்டும்போதாது. அவர்களுடைய ஊழல் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும். இவ்வாறு ராசாராம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
