"என் மகனே போயாச்சு! என்னை எதுக்கு பூமில வச்சிருக்கணும்" கேட்ட எஸ்.ஜானகி! வெடித்து அழுத சுஜாதா
பெங்களூர்: "என் மகனே போயாச்சு, என்னை எதற்காக கடவுள் பூமியில் வைத்திருக்கணும்" என எஸ்.ஜானகி கேட்டதாக பாடகி சுஜாதா உடைந்து அழுதார்.
இதுகுறித்து சுஜாதா புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜானகி அம்மா மறைந்துவிட்ட செய்தி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எப்போதும் அம்மாவுடன் பேசிக் கொண்டிருப்போம். கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் மிகவும் நெருக்கமாகிவிட்டோம்.

ஜானகி அம்மா எழுதிய பாடல்களை என் மகள் ஸ்வேதா பாட வேண்டும் என கேட்டார். இதனால் இந்த பணிகளுக்காக நான் அவரை அடிக்கடி சந்திக்க நேரிட்டது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நாங்கள் மைசூரில் அவரது வீட்டில் தங்கியிருந்தோம்.
அப்போது நான் சொன்னேன், "அம்மா நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்" என்றேன். அதற்கு அம்மா, "என்னை எதுக்கு வச்சிருக்கணும், பையனே போயாச்சு, நான் எதுக்கு இங்க இருக்கணும்" என கேட்டார்.
அவர் ஒரு புத்தகம் போல், அவரை பார்த்துதான் நாங்கள் எல்லாம் கற்றுக் கொண்டோம். இவ்வாறு கூறிய போதே சுஜாதா உடைந்து அழுதார். அவரை அவரது கணவர் தேற்றினார்.
ஆந்திராவில் பிறந்து 17-க்கும் மேற்பட்ட மொழிகளில் 50 ஆயிரம் பாடல்களை பாடிய பின்னணி பாடகி ஜானகி கடந்த சில ஆண்டுகளாக பாடல் பாடுவதையும் இசைக் கச்சேரிகளில் கலந்து கொள்வதையும் நிறுத்திக் கொண்டார்.
இதனால் அவர் மைசூரில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் அவருக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டது. இதையடுத்து அவர் மைசூரில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று இரவு அவர் உயிர் பிரிந்தது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பின்னணி பாடகி ஜானகி, உடல்நல பாதிப்பு காரணமாக நேற்று மதியம் 12.49 மணிக்கு மைசூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே கவலைக்கிடமான நிலையில்தான் இருந்தார். உடனடியாக அவரது உடல்நிலையை பரிசோதித்த எங்கள் மருத்துவக் குழுவினர் அவரை தீவிர சிகிச்சை பிரிவு என சொல்லப்படும் ஐசியூவிற்கு மாற்றப்பட்டார்.
அங்கு பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. மேலும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரது உயிரை காக்க சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஆனாலும் பலனளிக்கவில்லை. அவருக்கு தொடர்ந்து சிபிஆர் சிகிச்சையை மருத்துவ நெறிக்குள்பட்டு செய்த போதிலும் அவருக்கு மீண்டும் மீண்டும் பலமுறை மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பலனின்றி ஜானகி நேற்று இரவு 7.30 மணிக்கு காலமானார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜானகியின் உடல் இன்று காலை 8 மணி முதல் மகாராஜா கல்லூரியில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு பாடகிகள் சித்ரா, சுஜாதா, பாடகர் மனோ உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மைசூர் அருகே உள்ள ஜானகியின் பண்ணை வீட்டில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. இறுதி சடங்குகளை அவரது பேத்தி செய்து வருகிறார்.
எஸ். ஜானகிக்கு முரளி கிருஷ்ணா என்ற ஒரே மகன் இருந்தார். 65 வயதான அவர் நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி உயிரிழந்தார். இவருடைய மறைவு ஜானகியை உருக்குலைய செய்தது என்றே சொல்லலாம். புத்திர சோகம் என்பது யாருக்கும் வரக் கூடாத ஒன்று!


Click it and Unblock the Notifications
