தேசிய ஜனநாயகக் கூட்டணி மதசார்பற்றது: வைகோ
கோவை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கையின்படி மதச்சார்பற்ற அரசாக கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. இதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடம்இல்லை என கோவையில் ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
கோவை வருகை தந்த ம.தி.மு.க பொதுச் செயலரும், எம்.பி., யுமான வைகோ, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கை மற்றும் தேர்தல் வாக்குறுதியின் படிதான் செயல்பட்டு வருகிறது என்பதை பிரதமர் வாஜ்பாய் தெளிவாகவிளக்கியுள்ளார். பாபர் மசூதி இடிப்பு பிரச்னையில் அவர் அளித்த விளக்கம் எங்களுக்கு திருப்தியை தந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட வேறுயாரும் மதச்சார்பற்ற ஆட்சியைத் தர முடியாது.
தேசிய ஜனநாயக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவை அயோத்தி பிரச்னையை கிளப்பினாலும்,அவர்கள் பிரதமரைச் சந்தித்து விளக்கம் கேட்டனர். பிரதமரின் விளக்கம், அவர்களுக்கும் திருப்தியை அளித்துள்ளது.
பிரச்சனைகளை பூதாகரமாக்குகிறது காங்கிரஸ்:
காங்கிரஸ் கட்சிக்கு வேறு பிரச்னைகள் இல்லாததால், இதனை பெரிது படுத்தி வருகிறது. அயோத்தி பிரச்னையில் காங்கிரஸ் தலையிட அதற்கு தார்மீகஅடிப்படையில் கூட உரிமை கிடையாது. ஏனெனில், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அதனைத் தடுத்து நிறுத்த காங்கிரஸ் ஆட்சி தவறி விட்டது. இந்தப்பிரச்னையில் மட்டுமல்ல, ஜம்மு காஷ்மீர் பிரச்னையிலும் கூட காங்கிரஸ் இந்துக்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு வந்துள்ளது.
அயோத்தி பிரச்னையில் மூன்று அமைச்சர்கள் ராஜினமா செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. ஆனால், இந்த வழக்குகள் அரசியல்காரணத்திற்காக இட்டுக் கட்டப்பட்ட வழக்கு என்பதை பிரதமர் வாஜ்பாய் விளக்கியுள்ளார்.
இப்போதும் கூட இந்திய வரலாற்றில் கருப்பு நாளாக பாபர் மசூதி இடித்த தினம் இருந்து வருகிறது. இந்த சம்பவத்தை ம.தி.மு.க கண்டிக்கிறது. அங்குகோயில் கட்டுவதை எதிர்க்கும். இந்த எங்கள் கருத்தில் எப்போதும் மாற்றம் இருக்காது.
அப்போது பிரதமராக இல்லாவிட்டாலும் கூட மசூதி இடிப்பிற்கு வாஜ்பாய் கண்டனம், வருத்தம் தெரிவித்துள்ளார். இது பார்லிமென்ட் அவைக்குறிப்பில் இடம் பெற்றுள்ளது.
இந்த அரசு ஒரு சமய சார்பற்ற அரசாக செயல்பட்டு வருகிறது. இதற்கு தலைமை ஏற்றுள்ள வாஜ்பாய் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.இதில் எவ்வித சந்தேகம் கிடையாது.
கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியும் தங்களது நிலையை எடுத்துச் சொல்லவும் முழுச் சுதந்திரம் உண்டு. ஒவ்வொரு பிரச்னையிலும்அவரவர் கருத்துக்களை சொல்லலாம். அதை ஏற்றுச் செயல்படுத்துவது அல்லது நிராகரிப்பது அரசின் முடிவாகும்.
புலிகள் மீதான தடையை விலக்குங்கள்:
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என நான் வலியுறுத்தினேன். ஆனால் இதை கூட்டணியின் மற்ற கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.முரண்பாடான கருத்துக்கள் இருந்தாலும், செயலில் ஒற்றுமை இருக்கும்.
இந்திய அரசு பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அணு ஆயுத பலத்தில் மட்டுமல்ல, ஜனநாயகத்திலும் வலிமைபெற்றதாக இருக்கிறது. ஜனநாயகத்தில் வலிமை பெற்றதாகக் கருதப்படும் அமெரிக்காவில் கூட இப்போது நகைப்பிற்குரியதாக ஜனநாயகம்மாறிவிட்டது.
பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்துவதில் நூறு சதவீதம் பாரதிய ஜனதா அரசு உறுதியாக இருக்கிறது. இதில் எதிர்க்கட்சிகள்தான் முட்டுக் கட்டை போட்டு வருகிறன்றன.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்து வருகிறார். அவர் வேட்பாளர்களை அறிவிப்பது, அவரது அரசியல்பாணி . அவருக்கும் தி.மு.க.,விற்கும் உள்ள மோதலை தி.மு.க விடம் தான் கேட்க வேண்டும்.
தி.மு.க அரசின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு குறைகளைச் சுட்டிக் காட்டுவதைவிட முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து அந்தக் குறையை சொல்லி நிவர்த்தி செய்து வருகிறேன்.
தேர்தலில் ஜெ.வுக்கு இடமில்லை:
ஜெயலலிதாவைப் பொறுத்தவரை அவர் அடுத்த மூன்றாண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது. அவரை ஆறுமாத கால முதல்வராகக் கூட ஆக்கமுடியாது. ஏனெனில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், மூப்பனாரை முதல்வராக காண்பித்துவருகின்றனர் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications