வாஜ்பாய் விலகினால் 3வது அணி ஆட்சி: முலாயம்
லக்னோ:
ஆயுத பேர ஊழலை தொடர்ந்து வாஜ்பாய் அரசு பதவி விலகியதும் மக்கள் முன்னணி ஆட்சி அமைக்கும் என்கிறார் அதன் அமைப்பாளர் முலாயம் சிங்யாதவ்.
கம்யூனிஸ்ட்கள், சமாஜ்வாதி கட்சி போன்ற மூன்றாவது அணியில் உள்ள கட்சிகள் இணைந்து லோக் மோர்ச்சா என்ற மக்கள் முன்னணி அமைப்பு ஒன்றைதொடங்கியுள்ளன.
சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் அமைப்பாளராக உள்ள இந்த முன்னணிக்கு தலைமை வகிப்பவர் மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள்முதல்வர் ஜோதிபாசு.
லக்னோவில் நிருபர்களிடம் பேசிய யாதவ், ஆயுத பேர ஊழல் குறித்து விசாரிக்க நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டதை ஏற்க முடியாது. அனைத்துஆதாரங்களும் வீடியோ பதிவாக இருக்கும் போது மேற்கொண்டு விசாரிக்க தேவையில்லை.
நாட்டில் நடந்துள்ள மிகப்பெரிய ஊழலுக்கு பொறுப்பேற்று வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும். அந்த அரசு பதவி விலகியதும் மக்கள் முன்னணி ஆட்சிஅமைக்கும். ஆட்சி அமைக்கும் விதம் குறித்து முன்னணியின் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்கிறார் முலாயம்.
இது வரை நாட்டை ஆண்ட காங்கிரசும் , வாஜ்பாயின் பா.ஜ.க.வும் நாட்டின் நிர்வாகத்தை சீரழித்துவிட்டன.
மக்கள் முன்னணி ஆட்சியமைப்பதை தவிர தற்போது வேறு வழியில்லை என்கிறார் ஒரு காலத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த முலாயம்.
வாஜ்பாய் அரசு பதவி விலகினால், தேர்தல் தான் வரும் என அனைவரும் கருதும் நிலையில் முலாயம் இவ்வாறு கருத்து கூறியிருக்கிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications