சென்னை டெஸ்ட்: சச்சின் அடித்த 25வது சதம்
சென்னை:
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சென்னை டெஸ்டில் சச்சின் டெண்டுல்கர் தனது 25வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார்.
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான சென்னை டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் இரு அணிகளுக்கும் சாதகமாகவே இருந்தது. 3ம்நாள் ஆட்டம் தொடங்கியதும் சதம் அடிக்க இருந்த தாஸின் விக்கெட்டை கைப்பற்றியது ஆஸி. அணி.
பின்னர் 2வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற காரணமாக இருந்த வி.வி.எஸ். லட்சுமணனின் விக்கெட்டையும் விரைவில் கைப்பற்றியது. ஆனால், அதன்பின்னர் ஆட்டத்தை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றினர் சச்சின் டெண்டுல்கரும், ராகுல் திராவிடும்.
இன்றைய ஆட்டத்தில் செஞ்சுரி அடித்த டெண்டுல்கர் டெஸ்ட் மேட்சில் 25 சதங்கள் அடித்த 6 வது வீரர் என்ற பெருமையை பெற்றார். 126 ரன்கள் எடுத்துஇருந்த போது டெண்டுல்கர் அவுட் ஆனார்.
தாஸைப் போலவே சதம் அடிக்க தவறினார் திராவிட், 81 ரன்களில் ஆட்டம் இழந்தார். திராவிட்டின் விக்கெட் விழுந்ததும் ஆட்டம் ஆஸி.யின் பக்கம்திரும்பத் தொடங்கியது.
இப்போட்டியிலும் தனது மோசமான ஆட்டத்தை தொடர்ந்தார் அணித்தலைவர் செளரவ் கங்குலி(22 ரன்கள்). இந்தியாவின் கடைசி வரிசை வீரர்கள்விரைவில் அவுட் ஆனதால் இந்தியா 3ம் நாள் ஆட்ட இறுதியில் 9விக்கெட்டுகளை இழந்து 480 ரன்களை எடுத்தது.
ஆஸி. அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 89 ரன்கள் அதிகம் எடுத்து உள்ளது இந்தியா. பந்து வீச்சிற்கு சாதகமாக மாறி வரும் விக்கெட்டில் இந்தியவீரர்கள் தாக்கு பிடித்து ஆடியது பெரிய விசயமாக இருந்தது.
ஆஸி. அணியின் கிளென் மெக்ராத் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசி மூன்று முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். தாஸ், லட்சுமணன் மற்றும்கங்குலியின் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.
ஆஸி.யின் காலின் மில்லர், ஜில்லஸ்பி மற்றும் வார்னே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 4ம் நாள் ஆட்டத்தில் ஆஸி. அணி விரைவில் ஆட்டம்இழந்தால் இந்தியா இப்போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications