நாக்கை அறுத்த தொண்டருக்கு ஜெ. உதவி, சிகிச்சைக்கு ஏற்பாடு
சென்னை:
காதலுக்காக நாக்கை அறுத்துக் கொள்ளும் சொல்லாமலே படத்தை மாதிரி, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததற்கு நேர்த்திக் கடனாக நாக்கைஅறுத்துக் கொண்ட தொண்டருக்கு ரூ. 25,000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா முதல்வரானதையடுத்து திருப்பதி சென்று நாக்கை அறுத்து உண்டியலில் போட்டு காணிக்கை செலுத்திய அதிமுக தொண்டரைநேரில் அழைத்த ஜெயலலிதா ரூ. 25,000 வழங்கினார். மேலும் அதிமுக சார்பில் அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் டீக்கடை வைத்துள்ளார். தீவிர அதிமுக தொண்டர், குறிப்பாக ஜெயலலிதா விசுவாசி.ஜெயலலிதா முதல்வர் பதவியை ஏற்றதும் அளவு கடந்த சந்தோஷம் அடைந்த ராஜா, அந்த நிகழ்ச்சியை சென்னை வந்து நேரில் பார்த்தார்.பின்னர் திருப்பதி சென்று மொட்டை போட்டார். கையோடு, தனது நாக்கையும் அறுத்து உண்டியலில் போட்டார்.
இந்த செய்தியைக் கேட்டதும் ஜெயலலிதா பதறிப்போனார். உடனடியாக ராஜா மற்றும் அவரது குடும்பத்தினரை சென்னைக்கு தனதுஇல்லத்திற்கு வரவழைத்தார். இப்படியெல்லாம் செய்வதா என்று ராஜாவிடம் கடிந்து கொண்டார்.
நீங்கள் நின்றாக இருந்தால்தானே நானும் நன்றாக இருக்க முடியும் என்று ராஜாவிடம் கூறிய ஜெயலலிதா, இனிமேல் இதுபோன்றவிபரீதமான செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அன்புடன் கோரிக்கை விடுத்தார்.
ராஜாவின் குடும்பம் டீக்கடையை மட்டுமே நம்பி இருப்பதாக அறிந்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். அறக்கட்டளையிலிருந்து ரூ. 25,000நிதியுதவி அளித்தார். பின்னர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை நிதியுதவி மூலம், ராஜாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்வதாகஅறிவித்தார்.
அதிமுக செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் உண்டியலில் யாரும் நாக்கை அறுத்துப் போடவில்லை என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
இதனால், திருப்பதியில் வைத்து அவர் நாக்கை அறுத்துக் கொண்ட அவர் அதை உண்டியலில் போடவில்லை என்று தெரிகிறது. வேறுஎங்கோ எறிந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
அறுபட்ட நாக்குக்கு தையல் போடப்பட்டுள்ளது. அது செப்டிக் ஆகியுள்ளது. அவருக்கு அதிமுக அறக்கட்டளை தீவிர சிகிச்சைக்கு வழிசெய்திருக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்.












Click it and Unblock the Notifications