குஜராத்: 4வது நாளாக நாடாளுமன்றம் ஸ்தம்பிப்பு
டெல்லி:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நீக்குவது தொடர்பாக இன்றும் (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில்பெரும் அமளி நிலவியதையடுத்து, இரு அவைகளும் இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
மோடியை நீக்கியே தீர வேண்டும் என்று எதிர்க் கட்சி எம்.பிக்கள் மட்டுமில்லாமல் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் எம்.பிக்களும் பிடிவாதம் பிடித்து வருகின்றனர்.
மக்களவையின் 184வது விதிப்படியும், மாநிலங்களவையின் 170 விதிப்படியும் மோடி விவகாரம் தொடர்பாகவிவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் தொடர்ந்து கோஷம், கூச்சல் எழுப்பி வருகின்றன.
ஆனால் ஆளும் பாஜக அரசு இந்த விவாதத்திற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவாதம்கொண்டுவரப்படும் பட்சத்தில், விவாதத்தைத் தொடர்ந்த ஓட்டெடுப்பில் நிச்சயம் தாங்கள் தோற்று விடுவோம்என்ற பயத்தை அக்கட்சி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இதே பிரச்சனை காரணமாக இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம்ஏற்பட்டது.
மக்களவையில், மோடியை நீக்கியே தீர வேண்டும் என்று கோஷம் எழுப்பிக் கொண்டே அவையின் மையப்பகுதியை எதிர்க் கட்சி எம்.பிக்கள் முற்றுகையிட்டனர்.
அவர்களுக்குப் பின்னாடியே வந்த பாஜக எம்.பிக்கள், பிரதமர் வாஜ்பாயைப் பற்றிப் பேசியதை காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி வாபஸ் பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. மக்களவை சபாநாயகரான பி.எம். சயீது எவ்வளவோ கேட்டுக்கொண்டும் பலனளிக்காமல் போகவே, அவையை இன்றைக்கு முழுவதும் அவர் ஒத்திவைத்தார்.
ராஜ்யசபாவிலும் இதே நிலை ஏற்பட்டதையடுத்து, அவைத் தலைவரும் துணை ஜனாதிபதியுமான கிருஷ்ணகாந்த்அவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
எதிர்க் கட்சி எம்.பிக்கள் பிடிவாதம்:
தொடர்ந்து நான்கு நாட்கள் நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தியும்கூட மக்கள் முன்னணியைச் சேர்ந்தஎம்.பிக்கள் தங்களுடைய பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ளவே இல்லை.
மக்களவை 184வது பிரிவின் படி மோடி விவகாரம் தொடர்பாக விவாதமும் ஓட்டெடுப்பும் நடத்தும் வரை தாங்கள்தொடர்ந்து போராடப் போவதாக இந்த முன்னணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவகெளடாவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தும் கூறினர்.
மேலும் மக்கள் முன்னணி சார்பாக ஒரு குழுவும் குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறிய அவர்கள்,கோத்ரா உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் நிவாரண மையங்களையும் இந்தக் குழுபார்வையிடும் என்றும் தெரிவித்தனர்.
நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்:
இந்நிலையில் தொடர்ந்து நான்கு நாட்களாக அமளி காரணமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, நாளைஅனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு சயீது அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கூச்சல் போட்டு, அமளி ஏற்படுத்தி, அதனுடைய பெருமையையே எம்.பிக்கள் சிதறடித்துவிட்டனர் என்று சயீது கோபத்துடன் "ஸ்டார் நியூஸ்" நிருபரிடம் பேட்டியளித்தபோது குறிப்பிட்டார்.
குஜராத் செல்கிறார் ஜார்ஜ்:
இதற்கிடையே நான்கு நாள் பயணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று குஜராத்செல்கிறார்.
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளையும் நிவாரண மையங்களையும் அவர் அங்கு பார்வையிடவுள்ளார்.ராணுவத்தின் தேவை அங்கு இன்னும் அவசியம்தானா என்பது குறித்தும் அவர் ஆராயவுள்ளார்.
குஜராத்தில் தற்போது அமைதி நிலவுவதால் அங்கிருந்து ராணுத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ராணுவதளபதியான பத்மநாபன் நேற்றுதான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே குஜராத் வன்முறைச் சம்பவங்கள் குறித்த ஒரு இடைக்கால அறிக்கையை தேசிய மனித உரிமைகமிஷனிடம் மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது. குஜராத் அரசு ஏற்கனவே இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டது.












Click it and Unblock the Notifications