சுப.வீரபாண்டியனுக்கு 2 ஆண்டு சிறை
சென்னை:
புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு இம் மாதம் 20ம் தேதி வரை அவருக்கு அவகாசம் தரப்பட்டுள்ளது.இதனால் 20ம் தேதி வரை அவரைக் கைது செய்யக் கூடாது என போலீசாருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நேற்று முன் தினம் தான் இந்த இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்துஇயக்கத்தை தலைமையேற்று நடத்த ஆரம்பித்துள்ள சுப.வீரபாண்டியனுக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995ம் ஆண்டு நடந்த ஒரு விழாவில் புலிகளுக்கு ஆதரவாக அவர் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்கு விசாரணை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பின் விவரம்:
1995ம் ஆண்டு ஜூலை மாதத்தில் புலிகளுக்கு ஆதரவாக பொதுக் கூட்டத்தில் பேசியதாக சுப.வீரபாண்டியன் மீது போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். அதை நிரூபித்தும் உள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை வீரபாண்டியன் மறுக்கவில்லை.
இதனால் அவருக்கு சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. 3 ஆயிரம் அபராதமும்விதிக்கப்படுகிறது என்றார் நீதிபதி.
இதையடுத்து ரூ 3 ஆயிரத்தை வீரபாண்டியன் நீதிமன்றத்தில் செலுத்தினார். மேலும் ஜாமீனும் கோரி மனு செய்தார் வீரபாண்டியன். இதைஏற்ற நீதிபதி 20ம் தேதி வரை ஜாமீன் வழங்கினார்.
20ம் தேதிக்குள் இந்த தண்டனையை எதிர்த்து சுப.வீரபாண்டியன் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்கைதாவது உறுதி.












Click it and Unblock the Notifications