"பொடா"வுக்கு எதிராக உருவானது இயக்கம்
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, தமிழர் தேசிய இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 23 கட்சிகள் சேர்ந்து பொடாவுக்கு எதிரான இயக்கத்தை உருவாக்கியுள்ளன.
பொடா சட்டத்துக்கு எதிராக விவாதிப்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தான் பொடாவுக்கு எதிரான புதிய இயக்கம் தோன்றியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர். நல்லக்கண்ணு இந்தப் புதிய இயக்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளராக விடுதலை சிறுத்தைகளின் தலைவர் ஆர். திருமாவளவன் செயல்படுவார்.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் நல்லக்கண்ணு நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் பொடா சட்டம் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக மக்களின் அன்றாடப் பிரச்சனைகளாகி விட்ட நெசவாளர் பிரச்சனை, காவிரிப் பிரச்சனை, வறட்சி, குடிநீர் பஞ்சம் ஆகியவற்றிலிருந்து அவர்களைத் திசை திருப்புவதற்காகவும் அரசியல் பழிவாங்கும் நோக்குடனும் தமிழக அரசு இந்தப் பொடாவைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளது.
மக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகப் பேசக் கூட உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சட்டத்தின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட அனைவரையும் தமிழக அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பொடாவின் நிலை இப்படி என்றால் மற்ற மாநிலங்களில் சிறுபான்மை இன மக்களைக் கைது செய்வதற்காகவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே பொடா சட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்து வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்தச் சட்டம் இருக்கும் வரை அது எல்லா இடங்களிலும் தவறாகத் தான் பயன்படுத்தப்படும் நிலையே நீடிக்கும் என்றார் நல்லகண்ணு.
இவரைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன், பொடா சட்டத்தை எதிர்த்து விரைவில் மாநில அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications