சங்கிலி பறித்த 2 வாலிபர்களை நடுரோட்டில் அடித்துக் கொன்ற பொது மக்கள்
கோபிச்செட்டிப்பாளையம்:
நர்சிடம் சங்கிலி பறிக்க முயன்ற 2 வாலிபர்களை பொது மக்களே வளைத்துப் பிடித்து அடித்தே கொன்றனர். இச் சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
கோபிச்செட்டிப் பாளையத்தை அடுத்த பிச்சாண்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கோகிலா. இவர் ஈரோட்டில் ஒருமருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு இவர் பணி முடிந்து தனது தந்தையுடன் பஸ்சில் வந்திறங்கினார்.
இரவு 11 மணியளவில் ஒட்டக்குதிரை என்ற இடத்தில் பஸ் ஸ்டாப்பில் இறங்கிய இருவரும் தங்களது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இரு வாலிபர்கள் இவர்களைக் கடந்து சென்றனர். சிறிது தூரம் போய்விட்டுமீண்டும் திரும்பி வந்தனர்.
வந்த இருவரும் கோகிலாவின் தந்தையிடம் ஏண்டா, சாராயமாடா காய்ச்சுறே என்று கேட்டபடி நெருங்கினர். நாங்க போலீஸ்டாஎன்று கேட்டுக் கொண்டே அந்த முதியவரை ஒருவன் அடித்தான்.
இதையடுத்து கோகிலா அங்கிருந்து ஓட ஆரம்பித்தார். ஆனால், இடையில் மோட்டார் சைக்கிளை வந்து நிறுத்திய அவன்கோகிலாவை கையைப் பிடித்துக் கொண்டான். இன்னொருவன் கோகிலான் சங்கிலியைப் பிடித்து இழுத்தான்.
இதையடுத்து உதவி கேட்டு தந்தையும் மகளும் குரல் எழுப்பினர். அப்போது அருகாமையில் இருந்த வீடுகளில் இருந்து பொதுமக்கள் ஓடி வந்தனர். அவர்களைக் கண்டதும் இரு வாலிபர்களும் ஓட ஆரம்பித்தனர்.
ஆனால், மக்கள் இவர்களை துரத்திச் சென்று பிடித்தனர். இருவருக்கும் சரமாறியாக அடி விழுந்தது.
இருவரையும் உடைகளைக் கழற்றிவிட்டு வெறும் ஜட்டியுடன் நிற்க வைத்து உதைத்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் சேர்ந்துகொண்டு அடித்து மொத்தியதில் இருவரும் மயங்கினர். ஆனாலும் விடாமல் தடிகளாலும் கற்களாலும் பொது மக்கள் தாக்கினர்.
இதில் வாய், மண்டை உடைந்து இருவரது உடலில் இருந்தும் பெருமளவில் ரத்தம் வெளியேறியது. கை, கால்களும் உடைந்தன.
சிறிது நேரத்தில் இருவருமே அந்த இடத்தியே இறந்தனர். இதையடுத்து இருவரையும் ரோட்டிலேயே விட்டுவிட்டு மக்கள்கலைந்து சென்றுவிட்டனர். தகவல் அறிந்த கோபிச்செட்டிப்பாளையம் போலீசார் விரைந்து வந்தனர்.
ஆனால், இரு வாலிபர்களின் உடல்களைத் தான் அவர்களால் மீட்க முடிந்தது. இச் சம்பவம் தொடர்பாக யார் மீது வழக்குப்போடுவது என்று தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
-->


