ஈராக்கிய நகரம், நெடுஞ்சாலை, எண்ணெய் கிணறு, விமான தளம் பிடிபட்டது
குவைத்:
அமெரிக்க- பிரிட்டன் படைகள் இன்று காலை ஈராக்கின் உம் கஸ்ஸர் நகரைக் கைப்பற்றிவிட்டன. அதைத் தொடர்ந்து ஈராக்கின் தென்பகுதியில் உள்ள போ வளைகுடாவின் எண்ணெய் கிணறுகளையும் கைப்பற்றின.
தொடர்ந்து முன்னேறி வரும் அமெரிக்கப் படையினர் ஈராக் படையினருடன் கடும் சண்டையிட்டு பாஸ்ரா நகருக்குச் செல்லும் முக்கியநெடுஞ்சாலையின் ஒரு பகுதியையும் இன்று பிற்பகலில் கைப்பற்றினர்.
மாலையில் உம் கஸ்ஸார் நகரின் விமான தளத்தையும் அமெரிக்கப் படைகள் கைப்பற்றின.
நேற்று காலையில் தொடங்கிய அமெரிக்க விமானத் தாக்குதலும் ஏவுகணைத் தாக்குதலும் இரவு முழுவதும் தொடர்ந்தது.
ஈராக்கிய வீரர்கள் சரண்:
இந் நிலையில் அதிகாலையில் ஈராக்கில் நுழைந்த அமெரிக்க- பிரிட்டிஷ் கூட்டுப் படை குவைத் அருகே உள்ள ஈராக்கிய துறைமுகநகரமான உம் கஸ்ஸர் நகருக்குள் நுழைந்து அதைக் கைப்பற்றின. அந்த நகரில் இருந்த ஈராக்கிய வீரர்கள் வெள்ளைக் கொடிகளைக் காட்டிசரணைடைந்தனர்.
இதையடுத்து எண்ணெய் கிணறுகள் நிறைந்த போ வளைகுடாவில் நுழைந்த பிரிட்டிஷ் படைகள் மோதலே இல்லாமல் அதைக்கைப்பற்றினர். அங்கிருந்த சுமார் 200 ஈராக்கிய வீரக்கள் பிரிட்டிஷ் படைகளிடம் சரணடைந்தனர். இதையடுத்து இந்த எண்ணெய்கிணறுகளை இஙகிலாந்து படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளனர்.
குவைத் நாட்டு செய்தி நிறுவனமான குனா இதனைத் தெரிவிக்கிறது. ஈராக்கின் ஒரே துறைமுக நகர் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நகரைச் சுற்றி குவைத் நிலப்பரப்பு தான் அமைந்துள்ளது. இதனால் மிக வேகமாக இந்த நகரை பிரிட்டிஷ் படைகள் கைப்பற்றிவிட்டன.
அதே நேரத்தில் ஈராக்கின் தென் பகுதியில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான பாஸ்ராவைக் கைப்பற்றும் முயற்சிகளிலும் அமெரிக்கப்படைகள் ஈடுபட்டுள்ளன. பாக்தாத் நோக்கி முன்னேறும் படைகள் முதலில் பாஸ்ராவைக் கைப்பற்றிவிட்டு பின்னர் பாக்தாதைப்பிடிப்பார்கள் என்று தெரிகிறது.
பாஸ்ராவை நோக்கி முன்னேறி வரும் அமெரிக்கப் படைகளை ஈராக்கிய டாங்கிகள் தாக்கின. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையேகடும் மோதல் நடந்தது. ஈராக் படைகளை அமெரிக்க ஹெலிகாப்டர்களும் விமானங்களும் தாக்கியதால் அவர்கள் பின் வாங்கினர். பலமணி நேர மோதல் நடந்தது.
அதிலும் சாப்வான் என்ற இடத்தில் பயங்கர சண்டை மூண்டது. இதனால் பொது மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என இருராணுவத்தினரும் ஒலிப் பெருக்கிகள் மூலம் தொடர்ந்து எச்சரிக்கை செய்த வண்ணம் மோதலில் ஈடுபட்டனர்.
ஹெலிகாப்டர் தாக்குதலால் ஈராக் படைகள் பின் வாங்கியதால் குவைத்- பாஸ்ரா நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை அமெரிக்கப் படைகள்கைப்பற்றின.
இதனால் மேற்கொண்டு பாலைவனம் வழியாக மட்டுமின்றி சாலை வழியாகவும் ஈராக்குக்குள் அமெரிக்கப் படைகளால் முன்னேறமுடியும்.
அதே போல இன்று காலை முதல் ஈராக்கின் வட பகுதி நகரமான மொசுல் மீது அமெரிக்க விமானங்கள் கடுமையான குண்டு வீச்சுத்தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த நகரமே தீப் பற்றி எரிந்து வருகிறது. ஏவுகணைகளும் தாக்கி வருகின்றன.
பாக்தாதின் மீதும் மிக பயங்கரமான ஏவுகணை, விமானத் தாக்குதல் நடந்த வண்ணம் உள்ளது. விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் ஈராக்படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதிபர் சதாம் ஹூசேனின் மாளிகை மீதும் அவரது உறவினர்களின் வீடுகள் மீதும் கடுமையானதாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
சதாமின் மனைவி சகிதா கெய்ரல்லா தெல்பாவின் வீட்டின் மீதும், சதாமின் 3 மகள்களின் வீடுகளும் கடுமையான குண்டுவீச்சுத்தாக்குதலுக்கு உள்ளாயின. ஈராக்கின் வெளியுறவுத்துறை, கஸ்டம்ஸ் துறை அலுவலகங்களும் தரைமட்டமாக்கப்பட்டன.
நகரின் பல இடங்களில் வெடிச் சத்தம் கேட்ட வண்ணம் உள்ளது. ஆங்காங்கே கட்டடங்கள் தீப் பிடித்தும் எரிந்து வருகின்றன.
இந்தத் தாக்குதல்களையடுத்து பாக்தாதில் அபாய எச்சரிக்கை மணி ஒலித்தவண்ணம் உள்ளது.
யூப்ரிடஸ், டைகிரிஸ் நதிகளை ஒட்டியுள்ள எண்ணெய்க் கிடங்குகளையும் ராணுவக் கிடங்குகளையும் கைப்பற்ற அமெரிக்க மெரைன்படையினர் முன்னேறி வருகின்றனர்.
இதற்கிடையே தனது துணை ஜனாதிபதி தாகா யாசின் ரமதான், துணைப் பிரதமர் தாரிக் அஜீஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் நஜி சப்ரி,தகவல்துறை அமைச்சர் சையத் அல் சகாப் ஆகியோருடன சதாம் ஹூசேன் நேற்றிரவு ஆலோசைனை நடத்தியதாக ஈராக்கிய தொலைக்காட்சி தெரிவித்தது.
-->












Click it and Unblock the Notifications