ஆம்ஸ்ட்ராங் கேஸில் ட்விஸ்ட்.. அப்பீல் மனுவை வாபஸ் பெற்ற தமிழக அரசு! சிபிஐ விசாரணைக்கு ரூட் கிளியர்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய ஹைகோர்ட் உத்தரவுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு இப்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த இந்த கோரிக்கையை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை எந்தவிதமான தடையுமின்றி சிபிஐ வசம் முழுமையாக செல்வது உறுதியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழக அரசியலில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள தன்னுடைய வீட்டு பக்கத்திலேயே, ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்தது.. இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. அவர்கள் அனைவருமே தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.. முதற்கட்டமாக செம்பியம் காவல் துறையினர் இந்த படுகொலை சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
இருந்தாலும், போலீசாரின் இந்த விசாரணையில் திருப்தி இல்லை என்றும், பல முக்கிய சாட்சிகள் முறையாக விசாரிக்கப்படவில்லை என்றும் ஆம்ஸ்ட்ராங் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அவசர அவசரமாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்களே தவிர, இதன் பின்னணியில் இருக்கும் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கண்டறிய தவறிவிட்டார்கள் என்று ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும், அவரது சகோதரரும் சென்னை ஹைகோர்ட்டிலேயே பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அதுமட்டுமல்லாமல், இந்த வழக்கை நேர்மையான முறையில் விசாரிக்க சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி அவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். மாநில காவல் துறையின் விசாரணை முறையாக இல்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், வழக்கை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்கவும் ஆணையிட்டது.
சிபிஐ விசாரிக்குமா
ஆனால் சென்னை ஹைகோர்ட்டின் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, அப்போதைய ஆளும்கட்சியான திமுக தலைமையிலான தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீலுக்கு போனது.
சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், "தமிழக காவல் துறை இந்த வழக்கை சரியாகவும், நியாயமாகவும் விசாரித்து வருகிறது, அதனால் இந்த வழககில் சிபிஐ விசாரணை தேவையில்லை, எனவே உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது.
தவெக அரசு திடீர் ட்விஸ்ட்
இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இந்த வழக்கில் இப்போது ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதாக அதிகாரப்பூர்வமாக தவெக அரசு அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தாங்கள் முழுமையாக ஏற்பதாகவும், இந்த கொடூரக் கொலை வழக்கை சிபிஐ விசாரிப்பதில் தங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றும் தற்போதைய தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்குவதற்கான அனைத்து தடைகளும் நீங்கி, விசாரணைக்கான வழி முற்றிலும் சீராகியுள்ளது. இப்படியொரு ட்விஸ்ட் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...!!!














Click it and Unblock the Notifications