கண்ணப்பன் டெல்லியில் தங்கியிருக்க பிரதமர் அறிவுறுத்தல்
டெல்லி:
பொடா கைது விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சகத்தின் முழுமையான பதில் அறிக்கை கிடைக்கும் வரை தமிழகத்துக்குச் செல்ல வேண்டாம் என்று மத்திய அமைச்சர் கண்ணப்பனை பிரதமர் வாஜ்பாய் அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து தமிழகத்தில் தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளை கண்ணப்பன் ரத்து செய்துவிட்டார்.
கண்ணப்பனைக் கைது செய்வது குறித்து தனக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தை சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்கு பிரதமர் அனுப்பி வைத்தார். இந்தக் கைதுக்கு சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் ஜெயலலிதாவின் கடிதம் தொடர்பாக விவரமான அறிக்கையை பிரதமரிடம் ஜேட்லி சமர்பிக்கவில்லை.
இந்த அறிக்கை வந்த பின்னரே கண்ணப்பன் விவகாரத்தில் இறுதி முடிவை வாஜ்பாய் எடுப்பார் என்று தெரிகிறது. இன்று இரவு ஒரு வாரகால பயணமாக பிரதமர் இந்தோனேஷியா புறப்படுகிறார்.
திரும்பி வந்த பின்னரே சட்ட அமைச்சகத்தின் அறிக்கையைப் பெற்று வாஜ்பாய் ஆராய்வார் என்று தெரிகிறது. இந்த விஷயத்தில் தான் இறுதி முடிவு எடுக்கும் வரை கண்ணப்பனைக் கைது செய்யக் கூடாது என்பதற்காகவே தமிழக அரசுக்கு ஒரு பதில் கடிதத்தை அனுப்பி வைக்க வாஜ்பாய் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
மேலும் கண்ணப்பனைக் கைது செய்வதை பிரதமர் விரும்பவில்லை என்றும், ஆனாலும் அத்வானி தரப்பில் இருந்து நெருக்குதல் வந்தால் கைதுக்கு அனுமதி தந்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
இதனால் தான் சட்ட அமைச்சகத்தின் பதிலை ஒரு காரணமாகச் சொல்லி ஜெயலலிதாவையும் கண்ணப்பன் தரப்பையும் பிரதமர் சஸ்பெண்சில் வைத்திருப்பதாகவும் தெரிகிறது.
ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பி கைதுக்கும் இடைக்காலத் தடை விதித்துவிட்டு, அதே நேரத்தில் சட்ட அமைச்சகம் சொல்வதைச் செய்வேன் என்று கண்ணப்பனையும் குழப்பத்தில் வைத்துள்ளார் பிரதமர்.
இந்தோனேஷிய பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் திரும்புவதற்குள் துணைப் பிரதமர் மூலம் ஜெயலலிதா தனது நெருக்கடிகளை அதிகரித்தால் கண்ணப்பன் கைதாகலாம்.
இதற்கிடையே கண்ணப்பனைக் கைது செய்ய அனுமதி கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்து சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் விஜய்குமாரையும் சிபிசிஐடி போலீஸ் படையையும் கடந்த 3 நாட்களாக டெல்லியில் முகாமிட வைத்திருந்தது தமிழக அரசு.
ஆனால், இப்போதைக்கு கைது செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டதால் விஜய்குமார் நேற்று சென்னை திரும்பிவிட்டார்.












Click it and Unblock the Notifications