டெல்லி வராதது ஏன்?: அத்வானிக்கு ஜெ, விளக்கக் கடிதம்
டெல்லி:
சிறப்பு விமானம் பழுதடைந்த காரணத்தினால் தான் டெல்லிக்கு வர முடியவில்லை என துணைப் பிரதமர் அத்வானிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அத்வானியின் மகன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஜெயலலிதா டெல்லி செல்லத் திட்டமிட்டிருந்தார். அந் நிலையில், மத்திய அமைச்சர் கண்ணப்பனைக் கைது செய்யக் கூடாது என்று மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு ஒரு கடிதம் வந்ததாகக் கூற்பபட்டது.
(இதற்கு அடுத்த நாள் பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேரடியாகவே முதலவர் அலுவலகத்துக்கும் ஒரு கடிதம் வந்தது).
இந் நிலையில் தனது டெல்லி பயணத்தை ஜெயலலிதா திடீரென ரத்து செய்தார். அமைச்சர்களும் அதிகாரிகளும் நெடு நேரம் விமான நிலையத்தில் காத்திருந்துவிட்டு வீடுகளுக்குத் திரும்பினர். அவர்களுக்குக் கூட பயணம் ரத்தானதன் காரணம் சொல்லப்படவில்லை.
இந் நிலையில் கண்ணப்பன் விஷயத்தில் மத்திய அரசிடம் வந்த கடிதத்தைக் கண்டு அப்செட் ஆனதால் தான் ஜெயலலிதா தனது டெல்லி பயணத்தை ரத்து செய்ததாக தகவல்கள் தெரிவித்தன.
ஆனால், விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் தான் டெல்லிக்கு வர முடியவில்லை என்று விளக்கம் அளித்து அத்வானிக்கு ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சனிக்கிழமை தேதியிட்டே அக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில்,
டெல்லியில் இன்று நடந்த தங்களின் மகன் திருமண விழாவில் என்னால் கலந்து கொள்ள முடியாது என்று ஏற்கனவே தெரிவித்திருந்தேன். இருப்பினும் தொலைபேசி மூலம் தாங்கள் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததால் எனது முக்கியப் பணிகளை மாறுதல் செய்து இன்று டெல்லி வர திட்டமிட்டேன். இரவிலேயே சென்னை திரும்பவும் முடிவு செய்திருந்தேன்.
சென்னையில் இருந்து அரசின் செஸ்னா ரக விமானத்தில் டெல்லி வர இருந்தேன். ஆனால், புறப்படுவதற்கு சிறிது நேரம் முன் விமானத்தில் கோளாறு இருப்பதாகவும், அதை சரி செய்ய 24 மணி நேரம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எவ்வளவோ முயன்றும் வேறு தனியார் விமானம் எதையும் ஏற்பாடு செய்ய முடியவில்லை. பிற பயணிகள் விமானத்தில் வரலாம் என்றால் அவற்றின் பயண நேரங்கள் எனக்கு சரிப்பட்டு வரவில்லை. நான் இன்று (சனிக்கிழமை) இரவே சென்னை திரும்ப வேண்டிய நிலையில் உள்ளேன். ஏனெனில் நாளை அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளேன்.
எவ்வளவோ முயன்றும் தங்கள் மகனின் விழாவில் பங்கேற்க முடியாமல் போனதற்காக மிகவும் வருந்துகிறேன்.
இல்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
முன்பு பிரதமர் வாஜ்பாய் கூட்டிய காவிரி ஆணையக் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்துளளார், வாஜ்பாய் சென்னை வந்தபோது ஊட்டிக்குப் போய்விட்ட ஜெயலலிதா, பிரதமரை வரவேற்கச் செல்லவில்லை. அப்போதெல்லாம் வாஜ்பாய்க்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எதையும் முதல்வர் எழுதியதாகத் தெரியவில்லை.
ஆனால், அத்வானியின் வீட்டு விஷேசத்தில் பங்கேற்க முடியாமல் போனதற்கு கடிதம் அனுப்பியுள்ளார் முதல்வர்.
-->











Click it and Unblock the Notifications