திமுக மாஜிகளுக்கு விஜய் வேட்டு! வேகம் காட்டாத IPS அருண் மாற்றம்.. மகேஸ்வரியை வைத்து செம பிளான்
சென்னை: லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறையின் (DVAC) இயக்குனர் பொறுப்பிலிருந்து ஏ.அருண் நீக்கப்பட்டதற்கு பின் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் விஜய் இதற்கு பின் முக்கியமான சில திட்டங்களை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறையின் (DVAC) இயக்குனர் பொறுப்பிலிருந்து ஏ.அருண் ஐபிஎஸ் அதிரடியாக மாற்றப்பட்டு, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, லஞ்ச ஒழிப்புத்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் ஐஜியாகப் பணியாற்றி வந்த சி.மகேஸ்வரி ஐபிஎஸ்யிடம் ஒட்டுமொத்த லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விஜய் அரசின் அதிரடி மூவ்
தேர்தல் பிரச்சாரங்களின் போதே, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தின் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று விஜய் உறுதியளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் மாத இறுதியில், திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான எ.வ.வேலு மற்றும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் ஆகியோருக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது.

நெடுஞ்சாலைத்துறை திட்டங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
இருப்பினும், இந்த ஊழல் விசாரணைகளின் வேகம் குறித்து முதலமைச்சர் அலுவலகம் கடும் அதிருப்தியில் இருந்ததாக விஜய் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய காலகட்டத்திலேயே எ.வ.வேலு மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றதும், அது தொடர்பாக கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஒருவர் விசாரணையை எதிர்கொள்ளாமல் ஓடிவிட்டார் என்று விஜய் பகிரங்கமாக விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரிலிருந்து திரும்பிய எ.வ.வேலு, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்றும் அரசுக்கு சவால் விடுத்திருந்தார்.
திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் வழக்குகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதிலும், ஆதாரங்களைச் சேகரிப்பதிலும் முந்தைய இயக்குனர் ஏ.அருண் ஐபிஎஸ் சுணக்கம் காட்டியதாக விஜய் கருதியதாக தெரிகிறது.
மேலும், தேர்தல் காலத்திலேயே அருண் ஐபிஎஸ்ஐ மாற்றக் கோரி தவெக தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தது. இந்தச் சூழ்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, குண்டாஸ் சட்ட விவகாரத்தில் அருண் ஐபிஎஸ்க்கு எதிராக கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தது.
சி.மகேஸ்வரி ஐபிஎஸ்
லஞ்ச ஒழிப்புத்துறையின் வேகத்தை அதிகரிக்கவும், நேர்மையான இமேஜைக் கொண்டு வரவும் நியமிக்கப்பட்டுள்ள சி.மகேஸ்வரி ஐபிஎஸ், காவல்துறையில் அசாத்திய பின்னணி கொண்டவர்:
பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலை முடித்த இவர், 1997-ல் குரூப்-1 அதிகாரியாக நேரடியாக டிஎஸ்பி பதவியில் சேர்ந்தார். 2006-ல் இவருக்கு ஐபிஎஸ் (IPS) அந்தஸ்து கிடைத்தது கரூர், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பியாகவும், சென்னை தெற்கு மற்றும் மேற்கு மண்டல இணை ஆணையராகவும் சட்டம்-ஒழுங்கைத் திறம்பட நிர்வகித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் கறையற்ற புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சி.மகேஸ்வரி ஐபிஎஸ், இனி வரும் நாட்களில் திமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் ஃபைல்களை வேகப்படுத்துவார் என்றும், அடுத்தடுத்து பல அதிரடி கைதுகள் மற்றும் சோதனைகள் அரங்கேறும் என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications