ஒயின்ஷாப் வேலைக்கு சேரும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ பட்டதாரிகள்
சென்னை:
தமிழக அரசு ஏற்று நடத்தவுள்ள 8,500 மதுக்கடைகளில் சூபர்வைசர் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வழக்கறிஞர் மற்றும் என்ஜீனியர்களும் அடங்குவர்.
வரும் 29ம் தேதி முதல் அரசு மதுக்கடைகளை ஏற்று நடத்தவுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந் நிலையில் கடந்த 17, 18 தேதிகளில் சூபர்வைசர் வேலைக்குத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த வேலைக்கு விண்ணப்பித்து, நேர்முகத் தேர்விலும் ஆஜரானவர்களில் முதுநிலை பட்டதாரிகள், வழக்கறிஞர், என்ஜீனியர்கள் மற்றும் எம்.பி.ஏ. எம்.சி.ஏ. படித்தவர்களும் அடங்குவர்.
இவர்களில் ஒரு என்ஜீனியரிங் பட்டதாரி, 42 முதுநிலை பட்டதாரிகள், 99 இளநிலை பட்டதாரிகள் உட்பட 317 பேர் வேலூர் மாவட்டத்தில் ஒயின்ஷாப் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 2 ஊனமுற்றவர்களும் அடங்குவர்.
தர்மபுரி மாவட்டத்தில் ஒரு வழக்கறிஞர், 2 என்ஜீனியர்கள், 20 முதுநிலைப் பட்டதாரிகள் உட்பட 117 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த முதுநிலைப் பட்டதாரிகளில் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படித்தவர்களும் அடங்குவர்.
இந்த வேலையில் சேரும் முன் இவர்கள் ரூ.50,000 முன் பணம் செலுத்தவேண்டும். இவர்களுக்கு மாதம் ரூ.2,000 சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந் நிலையில் சென்னை நகரில் அரசின் டாஸ்மார்க் நிறுவனம் சார்பில் நடத்தப்படவுள்ள 1,023 மதுபானக் கடைகளில் விற்பனையாளராக வேலை பார்க்க ஆள் தேர்வு வருகிற நாளை முதல் தொடங்குகிறது.
விற்பனையாளர் பதவிக்குத் தேர்வு செய்யப்படுவோர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு மாதம் ரூ. 1000 ஊதியம் வழங்கப்படும். இதுதவிர விற்பனை ஊக்கத் தொகையாக ரூ. 5000 வரை வழங்கப்படும்.
ஆஇந்த வேலையில் சேர விரும்புவோர் பத்தாவது வகுப்பு வரை படித்திருக்க வேண்டும், 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் மட்டும் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம். வேலையில் சேர தேர்வு செய்யப்பட்டால் ரூ.15,000 முன் தொகை செலுத்த வேண்டும்.
காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஷிப்ட் அடிப்படையில் இவர்கள் வேலையில் அமர்த்தப்படுவர். வருகிற 26ம் தேதி இதற்கான தேர்வு சென்னையில் 6 இடங்களில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications