புதிய தலைமைச் செயலகம் கட்ட உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை:
கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக அரசு தனது புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்குத் தடை கோரி முன்னாள் பொதுப் பணித்துறைப் பொறியாளர் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
சென்னை கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான அடிக்கல்லையும் நாட்டியது.
இந் நிலையில் கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதால் சுற்றுச் சூழல் பாதிக்கும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே தலைமைச் செயலகம் கட்ட தடை விதிக்க வேண்டும் என்று முன்னாள் பொதுப் பணித்துறைப் பொறியாளர் உட்பட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, ஞானப்பிரகாசம் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. விசாரணையில், கோட்டூர்புரம் பகுதியில் உள்ள பழைய கட்டடங்களை இடிக்க மாட்டோம் என்றும், மேலும் சுற்றுச் சூழல் தொடர்பான மத்திய அரசின் விதிமுறைகள் இன்னும் சட்டமாக்கப்படவில்லை என்றும்,
அதுமட்டுமன்றி கோட்டூர்புரத்தில் கட்டுவதால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்போ, போக்குவரத்து நெரிசலோ ஏற்படாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பழைய கட்டடங்களை இடிக்க மாட்டோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதால், தலைமைச் செயலகம் கட்ட டெண்டர் விடத் தடையில்லை. தலைமைச் செயலகம் கட்டும் பணியில் தமிழக அரசு ஈடுபடலாம் என்று தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications