நவோதயா பள்ளிகளை தமிழகம் ஏற்க மறுப்பது ஏன்? புது அரசின் நிலைப்பாடு என்ன? உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ''தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய அரசின் நிலைப்பாட்டை அறிய விரும்புகிறோம். இந்த வழக்கில் 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று கூறி உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் மாவட்டம்தோறும் ஜவஹர் நவோதயா பள்ளிகள் அமைக்க உத்தரவிடக்கோரி 'மகாசபா' என்ற அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ''ஒவ்வொரு மாவட்டத்திலும் 240 மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் தற்காலி தங்குமிடத்தை வழங்க வேண்டும்'' என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு 2017 செப்டம்பர் 11ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தான், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று நீதிபதிகள் நாகரத்னா மற்றும் ஆர் மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி நாகரத்னா, ''நீங்கள்(தமிழக அரசு) தனி கல்வி முறையை வைத்திருக்கலாம். ஆனால் மத்திய அரசு பள்ளிகளை தடுக்க வேண்டாம். மத்திய அரசின் திட்டம் என்பதால் ஏன் ஏற்று கொள்ள வேண்டும் என்ற மனநிலையை வைத்து கொள்ளாதீர்கள். தமிழக அரசு நவோதயா பள்ளிகளை எதிர்ப்பது ஏன்? என்பது தெரியவில்லை'' என்று கூறினார்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிப்பிரியா, ''இந்த விஷயத்தில் முடிவெடுக்க உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இதனால் 12 வாரம் காலஅவகாசம் வழங்க வேண்டும். அதுவரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும்'' என்று கூறினார்.
அதற்கு எதிர் தரப்பான 'மகாசபா' அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரியதர்ஷினி எதிர்ப்பு தெரிவித்தார். 2 வாரம் மட்டுமே காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினார். ஆனால் நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க 3 வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. இந்த சமயத்தில் நீதிமன்றம் முக்கிய விஷயத்தையும் தெரிவித்தது.
அதாவது,''தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் புதிய அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிய விரும்புகிறோம்'' என்று கூறி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைக்கும் விவகாரத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு தனது நிலைப்பாட்டை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறி்ப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
