மதுரை மாநகராட்சி லாரிகள் "சாட்டிலைட்" மூலம் கண்காணிப்பு
மதுரை:
மதுரை மாநராட்சிக்குச் சொந்தமான குடிநீர் லாரிகள், குப்பை அள்ளும் லாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு முறையாக செல்கின்றனவா, ஒழுங்காக பணி செய்கின்றனவா என்பதை செயற்கைக் கோள் மூலம் கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது.
Global positioning system எனப்படும் செயற்கைக் கோள் மூலமான கண்காணிப்பின் கீழ முதல் கட்டமாக 20 லாரிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த லாரிகள் எத்தனை மணிக்கு எந்த இடத்துக்குச் சென்றன, எவ்வளவு நேரம் நின்றன, எந்தெந்த பாதை வழியாக சென்றன ஆகியவை சாட்டிலைட் மூலமாக கண்காணிக்கப்பட்டு மாநகராட்சியின் கம்ப்யூட்டர்களில் பதிவாகிவிடும்.
இது குறித்து மதுரை மாநகராட்சியின் திமுக மேயர் செ.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரை மாநகரில் குப்பை அள்ளும் லாரிகளும், குடிநீர் வினியோகிக்கும் லாரிகளும் சரியான முறையில் தங்களது பணிகளைச் செய்வதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
குடிநீர் லாரிகள் தங்களது பகுதிகளுக்கு வருவதில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதனால் இவற்றை ஒழுங்குபடுத்தவே இந்த நவீன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 20 குப்பை அள்ளும் லாரிகள் மற்றும் குடிநீர் லாரிகளில் முதல் கட்டமாக அதி நவீன டிரான்ஸ்மிட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கருவிகள் செயற்கைக் கோளுடன் ரேடியோ அலைகளால் இணைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் லாரிகள் எங்கு செல்கின்றன என்பதை 24 மணி நேரமும் செயற்கைக் கோள்கள் கண்காணிக்கும்.
ரூ. 3 கோடியே 20 லட்சம் செலவில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகப் பணிகள் இனிமேல் மதுரை நகரில் முறையாக நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications
