பா.ஜ.கவுக்கு அதிமுக தந்த ஜிலீர்!
சென்னை:
டெல்லி, மும்பை, கர்நாடகத்தில் தலா ஒரு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பா.ஜ.கவுக்கு, அதிமுக நிபந்தனை விதித்துள்ளதால் அந்த இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி உருவாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
துணைப் பிரதமர் அத்வானியும் முதல்வர் ஜெயலலிதாவும் ஆரம்ப கட்ட பேச்சு நடத்தி கூட்டணியை உறுதி செய்தனர். இதையடுத்து போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை தொடர்பாகப் பேச பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு ஜெயலலிதாவைச் சந்தித்தார்.
அப்போது 12 தொகுதிகளின் பட்டியலை நாயுடு தர, அதில் 6 மட்டுமே தர முடியும் என்றார் ஜெயலலிதா. அதிலும் திருநாவுக்கரசரின் புதுக்கோட்டை, கடந்த முறை பா.ஜ.க. ஜெயித்த நீலகிரி இரண்டும் தரப்பட மாட்டாது என்றும் கூறினார்.
இதையடுத்து இரு கட்சிகளும் குழுக்களை அமைத்து தொடர்ந்து பேசுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் பொன்னையன், ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பா.ஜ.க. குழுவில் ராதாகிருஷ்ணன், இல.கனேசன், சுகுமாறன் நம்பியார் ஆகியோர் உள்ளனர். இந்தக் குழுவினர் 4 முறை சந்தித்து பேச்சு நடத்திய பின்னரும் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை. தொடர்ந்து பேச்சு நடந்தாலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதற்கான காரணம் இப்போது தான் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. பா.ஜ.கவைப் போல நாங்களும் தேசியக் கட்சி தான் என்று கூறியுள்ள அதிமுக தங்களுக்கு டெல்லியில் ஒரு தொகுதியையும், மும்பையில் தாராவி பகுதி அடங்கிய தொகுதியையும், கர்நாடகத்தில் கோலார் தங்கச் சுரங்கம் தொகுதியையும் பா.ஜ.க. ஒதுக்க வேண்டும் என்று புதிய நிபந்தனையை விதித்துள்ளது.
நாங்கள் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை பா.ஜ.கவுக்கு சுட்டிக் காட்டிவிட்ட அதிமுக, தேசிய அளவில் கட்சியை விரிவாக்க இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று கருதுகிறது.
டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியையும், பெரும்பான்மையினராக தமிழர்கள் வசிக்கும் தாராவி சேரிப் பகுதி அடங்கிய மும்பை தொகுதியையும், தமிழ் சுரங்கத் தொழிலாளர்கள் நிறைந்த கோலார் பகுதி அடங்கிய கர்நாடகத் தொகுதியையும் தங்களுக்கு பா.ஜ.க. ஒதுக்க வேண்டும் என்று அதிமுக நிபந்தனை விதித்துள்ளது.
இதில் கர்நாடகத்தில் அதிமுகவுக்கு எம்.எல்.ஏ உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மும்பையில் அதிமுக கவுன்சிலர் தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளது. கோலார் தமிழர்களை வளைக்கவே, சுரங்கத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் இந்தக் கோரிக்கை பா.ஜ.கவில் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.
புதுக்கோட்டைக்கு பதில் ராமநாதபுரம்?:
இதற்கிடையே மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் போட்டியிடுவதற்கு வசதியாக, தேவர் சமுதாய மக்கள் நிறைந்த, ராமநாதபுரம் தொகுதியையாவது கொடுக்குமாறு பா.ஜ.க. சார்பில் அதிமுகவிடம் கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
திருநாவுக்கரசரின் புதுக்கோட்டையைத் தர முடியாது என்று கூறிவிட்ட ஜெயலலிதா ராமநாதபுரத்தைத் தருவாரா என்று தெரியவில்லை. ராமநாதபுரத்தில் கடந்தமுறை அதிமுகவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான மலைச்சாமி வென்றார். முக்குலத்தோர் அதிகம் உள்ள ராமநாதபுரம் தொகுதியை அதிமுக விட்டுத் தருவது சந்தேகமே.
அதிமுக நேர்காணல் ஆரம்பம்:
இதற்கிடையே அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் நேர்காணலை ஜெயலலிதா ஆரம்பித்துள்ளார். திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, திருச்செந்தூர், வேலூர், திருப்பத்தூர், வேலூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 6 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணலை அவர் நடத்தி முடித்துவிட்டார்.
தேர்தலில் போட்டியிட பணம் கட்டி விண்ணப்பம் கொடுத்தவர்கள் குறித்து அந்தந்தப் பகுதி அதிமுக நிர்வாகிகளிடமும், உளவுப் பிரிவு போலீசாரிடமும் தகவல்களைக் கேட்டு வாங்கி வைத்துள்ளார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் போட்டியிட பணம் கட்டிய இப்போதைய எம்.பியான பி.எச். பாண்டியனை ஜெயலலிதா நேர்காணலுக்கு அழைக்கவேயில்லை. இதனால் அவருக்கு இந்த முறை அவருக்கு சீட் கிடையாது என்று தெரிகிறது.
காங்கிரசில் இருந்து அதிமுகவுக்குத் தாவிய எம்.எல்.ஏவான டாக்டர் குமாரதாஸ், திருச்செந்தூர் தொகுதிக்கு பணம் கட்டினார். அவரையும் ஜெயலலிதா அழைக்கவில்லை. இதனால் அவர் நொந்து போயுள்ளார்.
நேர்காணலில் கேட்கப்பட்ட முக்கியமான கேள்விகளில் உங்கள் ஜாதி என்ன?, படிப்பு என்ன?, வருமானம் என்ன?, ஜானகி கோஷ்டியில் இருந்தவரா? ஆகியவையும் அடங்கும்.












Click it and Unblock the Notifications