தண்ணியில கண்டம்: மன்மோகனின் முதல் அக்னிப் பரிட்சை

Subscribe to Oneindia Tamil

- கான் &அறிவழகன்

சென்னை:

காவிரிப் பிரச்சனை மூலம் பிரதமர் மன்மோகன் சிங், தனது பதவிக் காலத்தின் முதல் அக்னிப் பரிட்சையை சந்திக்கவுள்ளார்.

காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் டெல்லிக்குப் படையெடுத்து பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

இதுநாள் வரை இல்லாத அளவு, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டு காவிரிப் பிரச்சினையில் ஒரே குரலை எழுப்பியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தனது கட்சிக்கு எம்.பிக்கள் இல்லாததால் இந்தக் குழுவில் பா.ஜ.க மட்டுமே இடம் பெறவில்லை.

தமிழக எம்.பிக்களின் கூட்டு படையெடுப்பால் டெல்லி அதிர்ந்துள்ளது உண்மை.

தமிழக குழு வந்து சென்ற பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளார்.

இந்தக் குழு தனது ஆய்வறிக்கை தாக்கல் செய்த பிறகு தான் மன்மோகன் சிங்குக்கு உணமையான தலைவலியே ஆரம்பமாகும்.

பிரச்சனையை மிகவும் சுமூகமாகவும், யாருக்கும் பாதகம் இல்லாமலும் தீர்த்து வைக்கும் இக்கட்டான நிலையில் மன்மோகன் சிங் உள்ளார்.

கர்நாடகத்தில் புதியாக ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளக் கூட்டணிக்கு தங்களது மாநிலப் பற்றை பறை சாற்றிக் கொள்ள கிடைத்துள்ள முதல் வாய்ப்பாக இந்த விவகாரத்தைக் கருதுகின்றன.

இதனால், தண்ணீர் தர முடியாது என்று சொல்லிவிட்டுத் தான் பிரச்சனை குறித்து பேசவே முன் வருகின்றனர்.

அதே நேரத்தில் மத்தியில் ஆட்சியில் நீடிக்க திமுக, மதிமுக, பா.ம.கவின் தயவு காங்கிரஸ் அரசுக்குத் தேவை.

இதனால் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை தான் மன்மோகன் சிங்குக்கு. அவரைவிட இந்த விவகாரத்தை சுமூகமாகத் தீர்க்கும் பொறுப்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கே அதிகம். தமிழகத்துக்கு வழக்கம்போல் துரோகம் விளைந்தால் சோனியாவை முதல்வர் ஜெயலலிதா விடமாட்டார்.

இதுவரை, காவிரி ஆணையத்தால் பலனில்லை என்று சொல்லி வந்த ஜெயலலிதா கூட ஆணையக் கூட்டத்தைக் கூட்டச் சொல்லி கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜெயலலிதாவுக்குப் பணிந்து ஆணையத்தைக் கூட்டக் கூடாது என கர்நாடக தலைமைச் செயலாளர் கே.கே. மிஸ்ரா, மத்திய நீர்வளத்துறை செயலாளர் கோஸ்வாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆணையம் கூட்டப்பட்டாலும், தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று தனது வழக்கமான பல்லவியைத் தான் கர்நாடகம் பாடும். இதனால் காங்கிரசுக்கும் பிரதமருக்கும் தமிழகத்தில் பெயர் கெடும்.

இதைத் தவிர்க்கும் பொருட்டு காவிரி ஆணையத்தைக் கூட்டச் சொல்லி வற்புறுத்த வேண்டாம் என திமுகவுக்கு காங்கிரஸ் தலைமையிடம் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் இந்த விஷயத்தில் திமுகவும் அமைதி காக்கிறது.

அதே நேரத்தில் திமுக கூட்டணி உங்களை சந்திக்கும்போது உரிய வகையில் மரியாதையாக நடத்தி, நீர் திறந்துவிடுவது பற்றி பரிசீலிப்போம் என்று பட்டும்படாமல் உறுதிமொழி தருமாறு கர்நாடகத்தின் புதிய முதல்வர் தரம்சிங்குக்கு காங்கிரஸ் தலைமையிடம் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்படி ஆளாளுக்கு காவிரி அரசியல் நடத்திக் கொண்டிருக்க, பாலமாய் வெடித்துக் கிடக்கும் பூமியையும், மழை பெய்துவிடாதா என்று மப்பும் மந்தாரமாய் காட்சி தரும் வானத்தையும் நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள் தமிழக காவிரிப் படுகை விவசாயிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+