பாமகவுடன் மோதல்: விஜய்காந்த்துக்கு பாஜக ஆதரவு
சென்னை - கடலூர்:
சென்னையில் 60 இடங்களிலும், கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியிலும் பாமக நிறுவனர் ராமதாஸின் உருவ பொம்மையை விஜயகாந்த் ரசிகர்கள் எரித்தனர். இதையடுத்து 20க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பா.ம.க- ரசிகர்கள் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் விஜய்காந்துக்கு பாரதீய ஜனதா கட்சியும், திரைப்பட பாதுகாப்புக் கழகமும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த மோதல் காரணமாக தனது வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்துவிட்ட விஜய்காந்த், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, ராமதாஸ்- விஜயகாந்த் இடையே சமரசம் செய்து வைக்கத் தயார் என்று மதுரை ஆதீனம் அறிவித்துள்ளார்.
ராமதாஸையும், அவரது மகன் மத்திய அமைச்சர் அன்புமணியையும் நடிகர் விஜயகாந்த் மறைமுகமாக விமர்சித்ததையடுத்து பாமகவினருக்கும், விஜயகாந்த் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
விஜயகாந்த்தின் ஜாதியைச் சொல்லி, பாமகவினர் ஆங்காங்கு தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர். சென்னை அம்பத்தூரில் விஜயகாந்த் மன்றங்களின் போர்டுகள் உடைக்கப்பட்டன. சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் விஜய்காந்தின் படங்களை திரையிட வேண்டாம் என தியேட்டர் அதிபர்களுக்கும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் பா.ம.க. தொண்டர்கள்.
இந் நிலையில், பாமகவினரைக் கண்டித்து கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில், ராமதாசின் உருவ பொம்மையை விஜய்காந்த் ரசிகர்கள் எரித்தனர். இதையடுத்து 15 ரசிகர்களை போலீஸார் கைது செய்தனர்.
அதே போல வட பழனி உள்பட சென்னையில் 60 இடங்களில் ராமதாஸின் கொடும்பாவியை விஜயகாந்த் ரசிகர்கள் எரித்தனர். இதையடுத்து இப் பகுதிகளில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக 5க்கும் மேற்பட்ட ரசிகர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பா.ம.க. நடத்தியுள்ள சர்வேக்களின்படி வன்னியர் அதிகம் வசிக்கும் வட மாவட்டங்களில் ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய்காந்துக்கு மிக அதிகமான அளவில் ரசிகர்கள் மன்றங்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து 30 பேர் கொண்ட படையை உருவாக்கியுள்ள பா.ம.க. ஊர், ஊராகச் சென்று ரசிகர் மன்றங்களைக் கலைக்குமாறு வன்னிய சமூக இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ரஜினி, விஜய்காந்த் மன்றங்கள் கலைக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் தகவல் எட்டியதையடுத்தே பா.ம.க மீது விஜய்காந்த் பாய்ந்ததாகத் தெரிகிறது.
விஜயகாந்துக்கு பாஜக ஆதரவு:
இதற்கிடையே விஜயகாந்துக்கு எதிரான பாமகவினரின் செயல்களுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:
விஜயகாந்த் நேரடியாக யாரையும் தாக்கிப் பேசவில்லை. அப்படியே பேசினாலும் அது தவறில்லை.
ஜனநாயக நாட்டில் தனது கருத்தைக் கூற ஒருவருக்கு உரிமை உண்டு. ஆனால் அது பொறுக்க முடியாமல் அவரது படங்களைக் கிழிப்பதும், வன்முறையில் ஈடுபடுவதும் கேபினட் அந்தஸ்தில் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சிக்கு அழகல்ல என்று கூறினார்.
சீண்டவேண்டாம்: கே.ராஜன் எச்சரிக்கை
அதேபோல், விஜயகாந்தை சீண்ட வேண்டாம் என்று தமிழ்த் திரைப்பட பாதுகாப்புக் கழகம் ராமதாசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இச் சங்கத்தின் தலைவர் கே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தலில் நிற்காமல் அமைச்சர் பதவி பெற்று விட்டார்கள் என்று பேசியது பெரிய குற்றமா? அதற்கு அவரை அரைவேக்காடு என்று நீங்கள் விமர்சனம் செய்தது சரியா?
காமராஜர், ராஜாஜி, அண்ணாத்துரை, நரசிம்ம ராவ் ஆகியோர் தேர்தலில் நிற்காமல் அமைச்சர்கள் ஆனதாக விளக்கமளித்துள்ளீர்கள். பல்கலைக்கழகத்தில் அரசியல் படித்து அகில உலகமும் போற்றும் தலைவர்களுக்கு நிகராக 5ம் வகுப்பு தேறிய மாணவனைப் பேசலாமா?
பாமக தொண்டர்கள் ஊருக்கு ஊர் தியேட்டர்களில் விஜயகாந்த் படங்களை ஓட விடாமல் தடுப்பதை நிறுத்த வேண்டும். உங்கள் தொண்டர்களின் கட்டுப்பாடற்ற செயலால் ரஜினிகாந்தும், விஜயகாந்தும் ஒன்று சேர்ந்து அரசியலுக்கு வரும் நல்ல காரியத்தை செய்து விடாதீர்கள். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தீர்ப்பு வேறுபட்டு வரலாம் என்று கூறினார்.
ரசிகர்களுடன் விஜய்காந்த் ஆலோசனை:
பாமகவினருக்கும் ரசிகர்களுக்கும் இடையேயான மோதல் அதிகரிப்பதையடுத்து கஜேந்திரா படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல இருந்த விஜயகாந்த் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு, தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து ரசிகர் மன்றத்தின் மாநில அமைப்பு செயலாளர் சந்திரகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ரசிகர்கள் யாரும் கொடும்பாவி எரிப்பிலும், கண்டன போஸ்டர்கள் ஒட்டுவதிலும் ஈடுபட வேண்டாம் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் விஜயகாந்த் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் வரை ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ச்மரசம்: ஆதீனம் தயார்
இதற்கிடையே ராமதாசும், விஜயகாந்தும் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்க வேண்டும் என்றும், அவர்களுக்கு இடையே சமரசம் செய்து வைக்கத் தயார் என்றும் மதுரை ஆதீனம் நிருபர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications