வேலை பறிபோன தாற்காலிக ஊழியர்கள் கண்ணீர்
சென்னை:
இருந்த வேலையெல்லாம் விட்டு விட்டு ஓடி வந்த தங்களை, டிஸ்மிஸ் செய்யும் நடவடிக்கையை கருணை அடிப்படையில் வாபஸ் பெற வேண்டும் என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக அரசு ஊழியர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திடீரென நேற்றிரவு அரசு ஆணை மூலம் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்த ஊழியர்கள் இன்று தாங்கள் வேலை பார்க்கும் அலுவலகங்களில் வந்து கண்ணீர் விட்டனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து16,000 பேர் தற்காலிகமாக அரசுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் நேற்றிரவு திடீரென நீக்கப்பட்டு விட்டனர்.
என்றாவது ஒரு நாள் நீக்கப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் தற்காலிக அரசு ஊழியர்கள் இருந்து வந்தாலும் கூட இவ்வளவு வேகமாக, இரவோடு இரவாக, கூண்டோடு நீக்கப்படுவோம் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
இப்போது, இவர்கள் அனைவரும் திக்கு திசை தெரியாமல் விழிக்கின்றனர். சுமார் ஓராண்டாகக் கிடைத்து வந்த இந்த ஊதியத்தை நம்பி பலர் திருமணம் செய்துள்ளனர். பலர் தங்கள் குடும்பச் சுமைகளை தாங்க ஆரம்பித்திருந்தனர்.
இப்போது, புதிய வேலையை எப்படித் தேடுவது என்று புரியாமல் இவர்கள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தாங்கள் வேலை பார்த்த அலுவலகங்களுக்கு இன்று காலை வந்த தற்காலிக ஊழியர்கள் அனைவரும் கண்ணீருடன் காணப்பட்டனர்.
கருணை அடிப்படையில், தங்களது எதிர்காலத்தையும் குடும்பத்தையும் மனதில் கொண்டு இந்த டிஸ்மிஸ் நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications