டிஐஜி முகம்மது அலி கைது: சிபிஐ அதிரடி
சென்னை:
போலி முத்திரைத் தாள் (ஸ்டாம்ப் பேப்பர்) ஊழலில் தொடர்புடைய தமிழக சிபிசிஐடி போலீஸ் டிஐஜி முகமது அலியையும், உதவி கமிஷ்னர் சங்கரையும் சிபிஐ இன்று கைது செய்தது.
முன்னதாக முகம்மது அலியின் வீடு, அலுவலகம், அவரது மகனின் வீடு, உதவி கமிஷ்னர் சங்கரின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் வீடுகளில் இன்று முழுவதும் சிபிஐ ரெய்ட் நடத்தியது.
பின்னர் முகம்மது அலியும் சங்கரும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில், அப்படியே கைது செய்யப்பட்டனர்.
இன்று காலை 6.30 மணிக்கு இந்த திடீர் ரெய்ட் தொடங்கியது. டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் குழு இந்த அதிரடி ரெய்ட் நடத்தி வருகிறது.
நாசிக்கில் உள்ள அரசு அச்சகத்தில் இருந்து முத்திரைத் தாள் பத்திரங்களை அச்சடிக்கும் இயந்திரங்களை திருட்டுத்தனமாகக் கடத்தி ரூ. 50,000 கோடி அளவுக்கு போலி முத்திரைத் தாள்களை அச்சடித்து நாடு முழுவதும் விற்ற அப்துல் கரீம் தெல்கி கும்பலுக்கு இந்த இரு தமிழக சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகளும் உதவியதாக புகார் கூறப்பட்டது.
இந்த வழக்கில், 2001ம் ஆண்டில் தெல்கியின் கூட்டாளியான நிஜாமூதீன் என்ற சென்னை டாக்டரை கர்நாடக போலீசார் கைது செய்து விசாரணைக்காக தமிழக சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆனால், நிஜாமூதீனிடம் பேரம் பேசி லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிய முகம்மத் அலி, அவரை வழக்கில் இருந்து விடுவித்துவிட்டார். மேலும் நிஜாமுதீனிடம் கைப்பற்றப்பட்ட பல கோடி மதிப்புள்ள போலி பத்திரங்களை அவரிடமே திருப்பியும் தந்துள்ளார்.
அப்போது சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக இருந்த சங்கரும் இதற்கு உடந்தையாக இருந்தார்.
மேலும் நிஜாமுதீனையும் அவரது மனைவியையும் மிரட்டி முகம்மது அலியும் அவரது மகனும் பல முறை பணம் பறித்ததாகவும் தெரிகிறது.
இந்த போலி முத்திரைத் தாள் விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூம் எடுத்ததையடுத்து வழக்கு சிபிஐ வசம் போனது.
இதையடுத்து சிபிஐ உத்தரவின் பேரில் நிஜாமுதீனை கர்நாடக போலீசார் மீண்டும் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் முகம்மது அலி அவரை வழக்கில் இருந்து விடுவித்த திடுக்கிடும் தகவல் வெளியில் வந்தது.
இதையடுத்து சிபிஐயின் வலையில் முகம்மத் அலியும், இப்போது வரதட்சணை ஒழிப்புப் பிரிவு உதவி கமிஷ்னர் ஆகிவிட்ட சங்கரும் சிக்கினர். ஆனால், முகம்மத் அலி முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்பதால், மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. இந்த வழக்கில் அலியை அதிகம் நெருக்கவில்லை.
இந் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அலி மற்றும் சங்கர் மீதான பிடியை சிபிஐ இறுக்கியுள்ளது. கடந்த வாரம் இந்த இருவரையும், டி.எஸ்.பி. செல்வராஜ் உள்ளிட்ட இரு அதிகாரிகளையும் டெல்லிக்கு வரவழைத்த சிபிஐ அங்கு வைத்து விசாரணை நடத்தியது.
இந் நிலையில் திடீரென கீழ்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் உள்ள டவர் பிளாக்கில் உள்ள முகம்மது அலியின் வீட்டில் காலை 6.30 மணிக்கு சிபிஐ குழு திடீர் சோதனையில் இறங்கியது. அதே நேரத்தில் அவரது அலுவலகத்திலும் சிபிஐ விசாரணையில் ஈடுபட்டது.
அதே போல அலியின் மகன் வீட்டிலும் சோதனை நடந்தது.
அதே வேளையில் அரும்பாக்கம் அமராவதி நகரில் உள்ள சங்கரின் வீட்டிலும் ரெய்ட் ஆரம்பித்தது. காலையில் தொடங்கிய இந்த அதிரடி சோதனைகள் மாலை வரை தொடர்ந்தன. இந்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்படலாம் என்பதை நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
அதே போல, முகம்மது அலியை சிபிஐ அதிகாரிகள் பிற்பகலில் தங்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதே போல சங்கரையும் தங்கள் அலுவலகத்துக்கு கொண்டு சென்ற சிபிஐ அவர்களைக் கைது செய்தது.
இவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ள சிபிஐ, தேவைப்பட்டால் டெல்லிக்குக் கொண்டு சென்றுவிடும் என்று தெரிகிறது.
இந்த இருவரையும் தொடர்ந்து மேலும் சில உயர் அதிகாரிகளின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தக் கூடும் என்று தெரிகிறது.
இப்போது கைதாகிவுள்ள முகம்மது அலி தான், திமுக தலைவர் கருணாநிதியை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்த சிபிசிஐடி குழுவுக்குத் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. முரசொலி மாறனைத் தாக்கியதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications