நாகப்பட்டிணம் விரையும் கடற்படை கப்பல்கள்
நாகப்பட்டிணம்:
![]() |
சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணத்துக்கு இந்திய கடற்படை கப்பல்கள் மூலமும் உணவு,தண்ணீர்,ஜெனரேட்டர்கள், மண்ணெண்ணெய், டீசல், மருந்துகள், மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
சென்னையில் இருந்து எஸ்டிபி-57 என்ற கடற்படை சரக்குக் கப்பல் உணவு, உடைகள், மருந்துகளுடன் நாகப்பட்டிணத்தை அடைந்துள்ளது.இந் நிலையில் கன்ஜார் என்ற கப்பல் இன்றிரவு உதவிப் பொருட்களுடன் நாகை கிளம்புகிறது.
நாகையில் சீபுதுப்பேட்டை என்ற இடத்தில் கடற்படையின் மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டு மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இலங்கைக்கு உதவி:
அதே போல இலங்கை, இந்தோனேஷியா, மாலத் தீவுகள் ஆகிய நாடுகளுக்கும் சென்னையில் இருந்து இந்திய கடற்படைக் கப்பல்கள்உணவு, மருந்துப் பொருட்களை ஏற்றிச் சென்றவண்ணம் உள்ளன
ஐ.என்.எஸ். குர்கி என்ற இன்னொரு கப்பல் இன்று ஜெனரேட்டர்கள், உணவு, தண்ணீர், உடைகள், மருத்துவக் குழு, மருந்துகளுடன்இந்தோனேஷியாவுக்குக் கிளம்புகிறது.
ஏற்கனவே ஐஎன்எஸ் நிருபக் என்ற கப்பல் இந்தோனேஷியாவுக்குக் கிளம்பிவிட்டது.
இதே போல இலங்கைக்கும் 2 கப்பல்களில் இந்த உதவிப் பொருட்களும் ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டுள்ளன.
மாலத் தீவுகளுக்கு கடற்படைக் கப்பல்களும் விமானங்களும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. அந்தமானுக்கும் சென்னையில்இருந்து உணவுப் பொருட்கள், தண்ணீர் ஆகியவை கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் கல்பாக்கத்துக்கு ஐ.என்.எஸ். மிதுன் என்ற கப்பல் அனுப்பப்பட்டது. கல்பாக்கம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து உறுதி செய்யஇந்தக் கப்பல் சில கருவிகளுடன் சென்றது.
இதனால் சென்னை துறைமுகத்தில் உள்ள கடற்படைத் தளம் மிகப் பரபரப்பாக இயங்கிக் கொண்டுள்ளது. விசாகப்பட்டிணம் கடற்படைத்தளத்தில் இருந்து சென்னை தளத்துக்கு மேலும் சில கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன.













Click it and Unblock the Notifications