ஆலடி அருணா உடல் தகனம்
சென்னை:
நெல்லை அருகே கடந்த 31ம் தேதி படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் உடல் இன்று சென்னையில்தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணா கடந்த 31ம் தேதி நெல்லை அருகே உள்ள ஆலங்குளத்தில் அடையாளம் தெயாத நபர்களால்படுகொலை செய்யப்பட்டார். அவருடன் பொன்ராஜ் என்ற ஆசிரியரும் கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக போலீஸார் 7தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
இதுவரை 26 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். மதுரை, கோவில்பட்டி, தூத்துக்குடி, மும்பை ஆகிய ஊர்களுக்குதனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர். விரைவில் கொலையாளிகளைக் கைது செய்வோம் என்று போலீஸார் நம்பிக்கைதெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், ஆலடி அருணாவின் உடல் நேற்று சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு நாடார் சமுதாயப் பிரமுகர்கள்,அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து இன்று காலை ஆலடி அருணாவின் உடல் பெசன்ட் நகர் மின்சாரமயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கொல்லப்பட்டது ஏன்?
ஆலடி அருணா கொலை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து இரண்டு விதமான தகவல்கள் நெல்லைப் பகுதியில் உலவி வருகின்றன.
ஆலடி அருணாவுக்கு சொந்தமாக ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி என்ற பெயரில் கல்லூரி ஒன்று நெல்லை மாவட்டத்தில் உள்ளது. இந்தக்கல்லூரிக்காக சமீபத்தில் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அப்போது தனியார் நிலம் ஒன்றை கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்ததாகத்தெரிகிறது.
இதுதொடர்பாக நில உரிமையாளர்களுக்கும், ஆலடி அருணாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விரோதம் காரணமாக ஆலடிஅருணா கூலிப் படையினரை வைத்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல, நெல்லை மாவட்டத்தைக் கலக்கிய ரவுடி கட்டத்துரையை மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் சில வருடங்களுக்கு முன்புவெட்டிக் கொலை செய்தனர். இந்தக் கொலையாளிகள் இதுவரை போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
இந்தக் கொலையாளிகளுக்கு ஆலடி அருணாதான் அடைக்கலம் கொடுத்து வந்தார் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு தனி வீடு எடுத்துக்கொடுத்து மிகுந்த பாதுகாப்புடன், ரகசியமாக வைத்திருந்தார் ஆலடி அருணா என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்துத் தெரியவந்ததால் கோபமடைந்த கட்டத்துரையின் ஆதரவாளர்கள்தான் ஆலடி அருணாவை தீர்த்துக் கட்டியிருக்க வேண்டும்என்றும் கூறப்படுகிறது.
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ஆலடி அருணா எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்து வந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்குஆதரவு தெரிவித்தார். ஆனால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நடைபயணம் மேற்கொண்டபோது அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
மீண்டும் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியில் (அதிமுக அல்லது மதிமுக) சேர்ந்து அரசியல் பணியாற்ற அவர் திட்டமிட்டுக்கொண்டிருந்ததாகவும், அந்த சமயத்தில்தான் அவருக்கு சோக முடிவு ஏற்பட்டதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications