For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தரம்சிங் கோவிந்தா: முதல்வராகிறார் கெளடாவின் மகன்- உபயம் பாஜக

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

கர்நாடகத்தில் முதல்வர் தரம்சிங் தலைமையிலான அரசு மெஜாரிட்டி இழந்தது. ஆனால், தான் ராஜினாமா செய்யப் போவதில்லைஎன்று அறிவித்துள்ள தரம்சிங் வரும் 27ம் தேதி சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்கப் போவதாக அறிவித்துள்ளாார்.

தேவே கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருக்கும் 58 எம்எல்ஏக்களில் 46 எம்எல்ஏக்களை தனியே பிரித்துக் கொண்டுகட்சியை உடைத்துவிட்டார் அவரது மகன் குமாரசாமி.

குமாரசாமியை முதல்வராக்க பாஜக ஒப்புக் கொண்டுவிட்டது. இதையடுத்து பாஜகவின் 79 எம்எல்ஏக்களுடன் சேர்ந்துஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் சதுர்வேதியை நேற்றிரவு சந்தித்தார் குமராசாமி. பாஜக-குமாரசாமி அணிஎம்எல்ஏக்களின் எண்ணிக்கை ஆட்சியமைக்கப் போதுமானதாகும்.

அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான தரம்சிங் அரசுக்கு தொடர்ந்து தனது கட்சியின் ஆதரவு நீடிப்பதாகவும், குமாரசாமிதரப்பு கோரிக்கையை ஏற்கக் கூடாது என்றும் தேவே கெளடா கூறியுள்ளார். அது தொடர்பாக ஆளுநருக்கு அவர் கடிதமும்அனுப்பியுள்ளார்.

ஆனால், கெளடாவுக்கு ஆதரவாக வெறும் 12 எம்எல்ஏக்களே உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 64 எம்எல்ஏக்கள் உள்ளனர்.வெறும் 76 எம்எல்ஏக்களின் ஆதரவு கொண்ட மைனாரிட்டி அரசாக தரம்சிங்கின் அரசு மாறிவிட்டது.

காங்கிரஸ்-கெளடா கூட்டணியிடம் பெரும்பான்மை பலம் இல்லை. இதனால் உடனடியாக தரம்சிங் அரசைக் கலைத்துவிட்டுதங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என பாஜக-குமாரசாமி கூட்டணி கோரியுள்ளது.

ஆனால், மெஜாரிட்டியை நிரூபிக்க தரம்சிங்குக்கு ஒரு வார கால அவகாசத்தை ஆளுநர் சதுர்வேதி வழங்கியுள்ளார். இந்நிலையில் வரும் 27ம் தேதி சட்டமன்றத்தில் தனது மெஜாரிட்டியை நிரூபிக்கப் போவதாக தரம்சிங் அறிவித்துள்ளார்.

கட்சி உடைவதைத் தடுக்க தேவே கெளடா நேற்று முழுவதும் பல வகைகளிலும் முயன்றார். பாஜகவை ஆதரித்தால் வரும்தேர்தலில் கட்சி மண்ணைக் கவ்வும் என மகன் குமாரசாமியிடம் கூறிப் பார்த்தார். ஆனால், தன்னை முதல்வராக்க பாஜக ஒப்புக்கொண்டுவிட்டதால் அந்த வாய்ப்பைத் தவற விட விரும்பாத குமாரசாமி தந்தையை சந்திக்க கூட மறுத்துவிட்டார்.

நேற்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய அவர், காஷ்மீர் மாநிலத்தைப் போல சுழற்சி முறையில் இரு கட்சிகளும் ஆட்சிநடத்தலாம் என்றார்.

முதல் 20 மாதங்கள் தனது தலைமையிலும் அடுத்த 20 மாதங்கள் பாஜக தலைமையிலும் ஆட்சி நடத்தலாம் என்றும், பாஜகவுக்குதனது முழு ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து குமாரசாமி ஆட்சியமைக்கஆதரவளிப்பதாக ஆளுநர் சதுர்வேதியிடம் பாஜக கடிதம் கொடுத்தது.

முன்னதாக குமாரசாமி மூலம் கெளடாவின் கட்சியை உடைக்க பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் ஒருகுழு பல வகைகளிலும் முயன்று வெற்றி கண்டது.

இந் நிலையில் இன்று கர்நாடக சட்டசபை கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம்தொடங்கியது. ஆனால், மெஜாரிட்டி இழந்துவிட்ட தரம்சிங் கூட்டத்தைக் கூட்டுவதற்கும், அதில் ஆளுநர் உரையாற்றுவதற்கும்பாஜக-குமாரசாமி கூட்டணி எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சட்டமன்றத்தில் உரையாற்ற ஆளுநர் செல்லக் கூடாது என்று கூறி இந்த எம்எல்ஏக்கள் இன்று ஆளுநர் மாளிகை முன் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணாவில் வெங்கையா நாயுடுவும் ஈடுபட்டார்.

உரை நிகழ்த்துவதற்கு முன்பாக முதலில் தரம்சிங் அரசை மெஜாரிட்டியை நிரூபிக்கக் கோர வேண்டும் இல்லாவிட்டால் அவரைடிஸ்மிஸ் செய்ய வேண்டும் என நாயுடு கூறினார். தங்களை ஆளுநர் கேட்டுக் கொண்டால் இன்றே மெஜாரிட்டியை நிரூபிக்கத்தயார் என்ற நாயுடு, மெஜாரிட்டியை நிரூபிக்க தரம்சிங் கால அவகாசம் கோருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் வேலைகளில் காங்கிரஸ் ஈடுபடலாம் என்றார்.

இந் நிலையில் பாஜகவின் எதிர்ப்பையும் மீறி ஆளுநர் சதுர்வேதி திட்டமிட்டபடி சட்டசபையில் உரையாற்றினார். இதன் பின்னர்அவையை வரும் 27ம் தேதிக்கு சபாநாகர் ஒத்தி வைத்தார். அந்த தினத்தில் தான் தனது மெஜாரிட்டியை தரம்சிங் நிரூபிக்கவேண்டும்.

குமாரசாமியுடன் மதசார்பற்ற ஜனதா தளத்தின் பெரும்பாலான எம்எல்ஏக்கள் போய்விட்டாலும் கூட்டணி அரசில்அமைச்சர்களாக உள்ள மூத்த தலைவர்கள் யாரும் போகவில்லை. அவர்கள் தொடர்ந்து கெளடா அணியிலேயே இருந்தபடிதரம்சிங்கை ஆதரித்து வருகின்றனர். இதில் துணை முதல்வர் பிரகாசும் அடக்கம்.

முன்னதாக தரம்சிங் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு இடைத் தேர்தலை சந்தித்தலாம் என எம்எல்ஏக்களிடம் கெளடா யோசனைதெரிவித்தார். ஆனால், அதை பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஏற்கவில்லை. தேர்தலை சந்திக்க பயந்தனர்.

இதை உணர்ந்த குமாரசாமி, தேர்தல் அச்சத்தில் இருந்த எம்எல்ஏக்களைத் தனக்கு ஆதரவாகத் திட்டினார். பாஜகவுடன் கூட்டணிஅமைத்து ஆட்சியைப் பிடிப்போம் என்று உறுதியளித்தார். இதையடுத்தே 46 பேரும் அவருக்கு ஆதரவாகத் திரும்பினர்.

இந்த 46 பேரில் 16 பேருக்கு அமைச்சரவையில் இடம் தருவதாகவும், மேலும் 25 பேருக்கு அரசுக் கழகங்களின் தலைவர்பொறுப்பு வழங்குவதாகவும் குமாரசாமி உறுதியளித்துள்ளார். இதனால் 46 எம்எல்ஏக்களில் 41 பேருக்கு கேபினட் அந்தஸ்தில்பதவிகள் கிடைத்துவிடும்.

மீதமுள்ள 5 பேருக்கும் ஏதாவது பதவிகள் தரப்பட்டுவிடும் என்று தெரிகிறது. பாஜகவுக்கு 18 அமைச்சர் பதவிகளையும் 35அரசுக் கழகத் தலைவர் பதவிகளையும் ஒதுக்க குமாரசாமி டீல் போட்டுள்ளார்.

இந் நிலையில் தாங்களையே உண்மையான மதசார்பாற்ற தளமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி குமாரசாமி தரப்புஎம்எல்ஏக்கள் இன்று சபாநாயகர் கிருஷ்ணாவிடம் கடிதம் அளித்தனர். சபாநாயகர் கிருஷ்ணா இப்போது தேவே கெளடாஅணியில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கர்நாடக விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இன்றுடெல்லியில் ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே வரும் 23ம் தேதி கட்சியின் தொண்டர்கள் கூட்டத்தை தேவே கெளடா கூட்டியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X